தீபாவளி நாட்களில் ட்விஸ்ட்! தமிழகத்தை குறிவைக்கும் கனமழை? வானிலை மையம் Warning!
தீபாவளி வாரத்தில் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு அதிகம். வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், நவம்பர் 5 முதல் 11 வரை பல பகுதிகளில் மழை மற்றும் பலத்த காற்று ஏற்படும். பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டியது அவசியம்.
செய்தியாளர் - ராஜ்குமார். ர
தீபாவளி என்பது இந்தியர்களின் பாரம்பரியப் பண்டிகைகளில் ஒன்று. இந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு தீபாவளியின்போதும் தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்வது வழக்கம். சில நேரங்களில், பட்டாசு வெடிக்க முடியாத அளவுக்குக்கூட கனமழை பெய்து மக்களின் கொண்டாட்டத்திற்குத் தடையாக அமைந்துவிடும்..தற்போது வடகிழக்குப் பருவமழை, எல் நினோ தாக்கம் மற்றும் புயல் பாதிப்புகள் எனப் பல்வேறு வானிலைச் சூழல்களுக்கு மத்தியில் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் ஏற்கெனவே மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தீபாவளி வாரத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, நவம்பர் 5ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமானது முதல் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நவம்பர் 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், அப்போது மணிக்கு 30 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நவம்பர் 7 மற்றும் 8ஆம் தேதிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைத் தொடர்ந்து, ஆந்திரப் பிரதேசத்தின் கடலோரப் பகுதிகள் மற்றும் ஏனாம் பகுதிகளிலும் நவம்பர் 5ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. கேரளா மற்றும் மாஹே பகுதிகளில் நவம்பர் 5ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரையும், தெற்கு உள் கர்நாடகாவின் சில பகுதிகளில் நவம்பர் 5ஆம் தேதியும் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கேரளா உள்ளிட்ட சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கிழக்கு இந்தியப் பகுதிகளான ஒடிசா மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நவம்பர் 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும். ஒடிசாவில் நவம்பர் 5 மற்றும் 6ஆம் தேதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதுடன், பலத்த காற்றும் வீச வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு இந்தியாவைப் பொறுத்தவரையில், அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் நவம்பர் 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அருணாச்சலப் பிரதேசத்திலும் நவம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு, தீபாவளி கொண்டாடப்பட உள்ள நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், தீபாவளிக் கொண்டாட்டங்களுக்குத் திட்டமிடும் பொதுமக்கள் வானிலை அறிவிப்புகளைக் கவனித்து அதற்கேற்ப செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
