காஷ்மீர் பேரவையில் அனல்.. காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி அதிரடித் தீர்மானம்! என்ன நடந்தது?
ஜம்மு-காஷ்மீருக்கு 1947இல் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து, 2019 ஆகஸ்ட் 5இல் ரத்து செய்யப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. ஏழாண்டுகள் கழித்து, மாநில அந்தஸ்தை மீட்க முதல்வர் உமர் அப்துல்லா சட்டமன்றத்தில் அதிரடி தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு எதிராக பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்து, பாரத் மாதா கி ஜே முழக்கத்துடன் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1947இல் இந்தியாவுடன் இணைந்த ஜம்மு- காஷ்மீருக்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 370இன் கீழ் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது. ஆனால், 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி மத்திய அரசு அந்தச் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, அம்மாநிலத்தை ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் என யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. ஏறக்குறைய ஏழாண்டுகள் கடந்துவிட்ட நிலையில் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி சட்டமன்றத்தில் முதல்வர் உமர் அப்துல்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளார்.
இந்த தீர்மானத்தின் மீது ஆளும் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. 2019 ஆகஸ்ட் ஐந்தாம் தேதிக்கு முந்தைய நிலைமை குறித்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம். எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். பாரத் மாதா கி ஜே என்றும் சபாநாயகரே பதவியை விட்டு விலகுங்கள் என முழக்கமிட்டு அவையின் மையப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உமர் அப்துல்லா கொண்டுவந்த தீர்மானத்தின் மீது 10 திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன. அதில் 8 திருத்தங்கள், 2019ஆம் ஆண்டுக்கு முன் இருந்த சிறப்பு அந்தஸ்தையும் சேர்த்து மீட்டெடுக்க வலியுறுத்தின. மாநில அந்தஸ்து தீர்மானம் தவிர, முதல்வர் உமர் அப்துல்லா 5 புதிய மசோதாக்களை காஷ்மீர் சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். தேசிய அரசியல் சூடு, பாஜகவின் எதிர்ப்பு எனப் பல திருப்பங்களுக்கு நடுவே முழு மாநில அந்தஸ்து தீர்மானம் காஷ்மீர் சட்டமன்றத்தில் நிறைவேறியிருக்கிறது. இதற்கு மத்திய அரசு என்ன பதில் ஆயுதத்தை எடுக்கும் என்ற கேள்வியும் அரசியல் அரங்கில் எழுந்திருக்கிறது.

