சூட் கேஸில் சடலமாக மீட்கப்பட்ட காங்கிரஸ் பெண் நிர்வாகி; கதறும் தாய்..அதிர்ச்சியில் குடும்பத்தினர்!
ஹரியானாவில் பேருந்து நிலையம் அருகே கிடந்த சூட்கேஸில் பெண் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர் ஹாரியானாவை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஹரியானா மாநிலம் ரோஹ்நக் -டெல்லி நெடுஞ்சாலையில் உள்ள சாம்ப்லா பேருந்துநிலையத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் மர்ம சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. இதனை கவனித்த பயணிகள் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பின்னர், சூட் கேஸை திறந்து பார்த்தபோது பெண் அதனுள் இளம் பெண் ஒருவரின் சடலம், கழுத்து அறுக்கப்பட்டநிலையில் கிடந்துள்ளது. சடலத்தை பிரேதபரிசோதனை செய்து பார்த்ததில், அவர் ஹரியானா மாநிலம் சோனேபட் அடுத்த கதுரா கிராமத்தைச் சேர்ந்த ஹிமானி நர்வால் (22) என்பது உறுதி செய்யப்பட்டது.
இவர் ஹரியானாவின் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். சட்டம் பயின்ற அவர், ஹரியானா மாநில காங்கிரஸில் இணைந்து தீவிரமாக பணியாற்றி வந்தார்.
கடந்த 2023-ம் ஆண்டு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நடத்திய பாரத ஒற்றுமை (பாரத் ஜோடோ) யாத்திரையில் ஹிமானி நர்வால் பங்கேற்றார். அப்போது ராகுலுடன் அவர் கைகோத்து நடந்து செல்லும் புகைப்படம், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. இதன்காரணமாக கட்சியில் அவர் மேலும் பிரபலம் அடைந்தார். இந்தநிலையில்தான், தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இறந்த பெண்ணின் தாய் சவிதா தெரிவிக்கையில், “ எனது மகள் கடந்த 28-ம் தேதி இரவு திருமண விழாவில் பங்கேற்க சென்றதால் செல்போனை சுவிட்ச் ஆப் செய்திருக்கலாம் என்று கருதினேன். தற்போது அவள் கொலை செய்யப்பட்டிருக்கிறாள்.என் மகளின் உயிரைப் பறித்ததற்கு தேர்தலும் கட்சியும்தான் காரணம் .
இதனால்தான் அவளுக்கு எதிரிகள் உருவாகினர். குற்றவாளிகள் கட்சியைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம். அவளுடைய நண்பர்களாகவும் இருக்கலாம். எனது மகளின் வளர்ச்சியை பிடிக்காதவர்கள்தான் இதனை செய்திருக்கிறார்கள் என நான் நினைக்கிறேன். அவள் ஹூடா குடும்பத்துடன் நெருக்கமாக இருந்தார். இதனால், சிலருக்கு அவள்மீது பொறாமை ஏற்பட்டது.
காங்கிரஸ் தலைவர் பூபிந்தர் சிங் ஹூடாவின் மனைவி ஆஷா ஹூடாவுடக்கு மிகவும் நெருக்கமானவள். இந்த சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்திலிருந்து எங்களுக்கு தொலைபேசியில் அழைப்பு வந்தது. என் மகளுக்கு நீதி கிடைக்கும்வரை நான் இறுதி சடங்கு எதுவும் செய்யமாட்டேன்.” என்று தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமல்ல, தனது மூத்த மகனும் 2011 இல் கொல்லப்பட்டதாக தாய் சவிதா கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.