லவ்- ஜிகாத் வழக்கு: கோர்ட்டில் ஆஜராகிறார் ஹாதியா!
லவ்- ஜிகாத் வழக்கில் தொடர்புடைய கேரள பெண் ஹாதியா, நவம்பர் 27 ம் தேதி உச்சநீதிமன்றத்தில் ஆஜராகிறார்.
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் கே.எம்.அசோகன். இவரது மகள் அகிலா. இவரை மதம் மாற்றி ஹாதியா என்ற பெயரில் ஷபின் ஜகான் என்பவர் திருமணம் செய்தார். ஜகான், பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்புடையவர் என்றும் சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத ஆதிக்கம் நிறைந்த பகுதியில் பணியமர்த்த அகிலா, மதமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இத்திருமணத்தை எதிர்த்து கேரள நீதிமன்றத்தில் அசோகன் வழக்குத் தொடர்ந்தார். விசாரித்த உயர்நீதிமன்றம், இதில் லவ் ஜிகாத் சதி இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது என்று கூறி திருமணத்தை ரத்து செய்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் ஜகான் மேல்முறையீடு செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், ’ திருமணம் என்பது தனிப்பட்ட விஷயம். இந்த திருமணத்தை விருப்பப்பட்டுதான் அகிலா செய்து கொண்டாரா என கேட்க வேண்டும். எனவே ஹாதியாவை நவ., 27 ம் தேதி நீதிமன்றத்தில் அவர் தந்தை ஆஜர்படுத்த வேண்டும்' என உத்தரவிட்டது.
இந்நிலையில் ’ஹாதியாவை நவம்பர் 27-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவேன்’ என அவர் தந்தை அசோகன் தெரிவித்துள்ளார்.