குஜராத் | 12-ம் வகுப்பிற்குள் இடைநிற்கும் மாணவர்கள் – வெளியான அதிர்ச்சி அறிக்கை!
குஜராத் மாநிலப் பள்ளி கல்வித்துறையில் 2025-26 ஆம் கல்வியாண்டில் 1.15 கோடி மாணவர்கள் சேர்ந்துள்ள போதிலும், அவர்களில் 12-ஆம் வகுப்பு வரை தொடர்ந்து படிப்பவர்களின் எண்ணிக்கை வெறும் 54.5% மட்டுமே என்று மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள UDISE+ அறிக்கை தெரிவிக்கிறது. இதன் மூலம், சுமார் 45.5% மாணவர்கள் 12-ஆம் வகுப்பு முடிப்பதற்குள் பாதியிலேயே பள்ளிப் படிப்பை நிறுத்திவிடுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதில் மாணவர்களின் படிப்புத் தொடர்ச்சி விகிதம் 53 சதவீதமாகவும், மாணவிகளின் விகிதம் 56.2 சதவீதமாகவும் உள்ளது. இது தேசிய சராசரியான 51.9 சதவீதத்தை விடச் சற்று அதிகமாகும். துவக்கப் பள்ளி அளவில் குஜராத் 100% படிப்புத் தொடர்ச்சியை எட்டியிருந்தாலும், நடுநிலைப் பள்ளியில் இது 90.4% ஆகக் குறைந்து, உயர்நிலைப் பள்ளி அளவில் மிகக் கடுமையாகச் சரிவடைகிறது. குறிப்பாக, குஜராத்தில் உயர்நிலை அளவில் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்துவோரின் எண்ணிக்கை 12.5 சதவீதமாக உள்ளது. இது தேசிய சராசரியான 7 சதவீதத்தை விடப் பெருமளவு அதிகமாகும். மாநிலத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த சில முக்கியக் குறைபாடுகளையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
குஜராத்தில் 2,335 பள்ளிகள் ஒரே ஒரு ஆசிரியரைக் கொண்டு மட்டுமே இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் 80,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். மாநிலத்தில் 58 பள்ளிகளில் ஒரு மாணவர் கூடச் சேரவில்லை. ஆனால், அந்தப் பள்ளிகளில் இன்னும் 74 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். தேசிய அளவில் 24 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதம் உள்ள நிலையில், குஜராத்தில் 29 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அளவில் பற்றாக்குறை நிலவுகிறது. பள்ளிப் படிப்பின் தொடக்கத்தில் 100% சேர்க்கை இருந்தாலும், மாணவர்கள் தங்களது 12-ஆம் வகுப்பு வரை கல்வியைத் தொடர்வதை உறுதி செய்வதில் குஜராத் கல்வித்துறை இன்னும் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருவதை இந்த அறிக்கை காட்டுகிறது.

