அமர்நாத் யாத்திரை | 57 நாள் யாத்திரையில் 5ஆவது நாளிலேயே உருகிய பனி லிங்கம்.. காரணம் என்ன?
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில், அமர்நாத் குகைக் கோயில் அமைந்துள்ளது. இது, ஸ்ரீநகரில் இருந்து 141 கிலோ மீட்டர் தொலைவிலும் கடல் மட்டத்தில் இருந்து 3,888 மீட்டர் (12,756 அடி) உயரத்திலும் அமைந்துள்ளது. மேலும், இது காஷ்மீர் இமயமலையில் உள்ள லிட்டர் பள்ளத்தாக்கின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த குகைக் கோயிலில் இயற்கையாகத் தோன்றும் பனிலிங்கத்தைத் (பாபா பர்ஃபானி) தரிசிக்க ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதாவது, குகையின் வெப்பநிலை மற்றும் வானிலை நிலைகளுக்கு ஏற்ப வளர்ந்து சுருங்கும் ஒரு பருவகாலப் பனிப்பாறையான, இயற்கையாக உருவான பனிலிங்கத்தை யாத்ரீகர்கள் வழிபடுகின்றனர்.
இந்தப் பனிலிங்கத்தை பக்தர்கள், வழக்கமான 48 கி.மீ. பஹல்காம் பாதை வழியாகவோ அல்லது குறுகியதும் ஆனால் செங்குத்தானதுமான 14 கி.மீ. பால்டால் பாதை வழியாகவோ அடையலாம். அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை கடந்த 3ஆம் தேதி தொடங்கியது. அடுத்த மாதம் 28ஆம் தேதி வரை 57 நாட்கள் யாத்திரை நடைபெற உள்ளது.
இந்த நிலையில், இந்த புனிதப் பயணத்தின் தொடக்கத்தில் சுமார் 5 அடி உயரத்தில் காட்சியளித்த பனி லிங்கம், யாத்திரை தொடங்கிய 5 நாட்களிலேயே 90%-க்கும் மேல் உருகி கிட்டத்தட்ட மறைந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குகையின் தட்பவெப்பநிலை மற்றும் நிலவின் சுழற்சிக்கு ஏற்ப இது உருமாறுவது இயற்கை என்றாலும், யாத்திரை தொடங்கிய 5 நாட்களிலேயே இது முழுமையாக உருகியது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது. ஆனால், இன்னும் சிலரோ, இதற்கு முன்பு 2004, 2006, 2007, 2016 மற்றும் 2020 போன்ற ஆண்டுகளில் இதேபோன்ற முன்கூட்டிய உருகுதல் நிகழ்ந்துள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர். நடப்பு ஆண்டு, அது வழக்கத்தைவிட சற்று முன்னதாகவே உருகிவிட்டதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இமயமலைப் பகுதியின் உணர்திறன் வாய்ந்த சுற்றுச்சூழல் அமைப்பில் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த வெப்பநிலை உயர்வே பனி லிங்கம் வேகமாக உருகியதற்கு பிரதானக் காரணமாகக் கூறப்படுகிறது. அமர்நாத் குகைக்கு மிக அருகில் பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட தற்காலிக மழைக் கூடாரங்கள் மற்றும் புதிய கட்டுமானங்கள், அங்குள்ள உள்ளூர் நுண்-காலநிலையை மாற்றியிருக்கலாம் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
பனி லிங்கம் உருகி மறைந்தபோதிலும், சிவபெருமானின் மீதான ஆன்மீக நம்பிக்கையின் காரணமாக நாடு முழுவதிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து அமர்நாத் நோக்கி யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். யாத்திரை தொடங்கிய முதல் 5 நாட்களிலேயே 1.13 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசித்து சாதனை படைத்துள்ளனர். கடந்த ஆண்டு அமர்நாத் யாத்திரையில் 3 லட்சத்து 77 ஆயிரம் பேர் பங்கேற்று பனிலிங்கத்தை தரிசனம் செய்தனர். நடப்பு ஆண்டில் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அமர்நாத் யாத்திரையில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
2025 ஏப்ரலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, முன்னெப்போதும் இல்லாத பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இந்த ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி அமர்நாத் யாத்திரை தொடங்கியது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு குறித்த கவலைகள் இருந்தபோதிலும், யாத்ரீகர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது.

