”ஆன்லைன் ரம்மிக்கு 28% வரி”- ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புகள்

”ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் பந்தய விளையாட்டுகள் மீது 28% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்” என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
gst council meeting
gst council meetingtwitter

நாடு முழுவதும் ஒரே வரியாக சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) கடந்த 2017 ஜூலை 1ஆம் தேதி கொண்டு வரப்பட்டது. இந்த 6 ஆண்டுகளில் இதுவரை ஜிஎஸ்டி கவுன்சிலின் 49 கூட்டம் நடைபெற்றுள்ள நிலையில், ஜிஎஸ்டி கவுன்சிலின் 50ஆவது கூட்டம் தலைநகர் டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெற்றது. மாநில நிதியமைச்சர்கள், மத்திய நிதியமைச்சக உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகொண்டார்.

நிர்மலா சீதாராமன், தங்கம் தென்னரசு
நிர்மலா சீதாராமன், தங்கம் தென்னரசுtwitter

மாநில அரசுகள் எதிர்ப்பு

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட பணத்தைப் பந்தயம் வைத்து விளையாடப்படும் ஆன்லைன் விளையாட்டு, குதிரைப் பந்தயம், கேசினோ உள்ளிட்ட பந்தயங்களுக்கு 28% ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும் எனப் பல்வேறு மாநில அரசுகள் வலியுறுத்தின. குறிப்பாக, ‘ஆன்லைன் ரம்மி மீதான ஜிஎஸ்டி வரி, தமிழக அரசின் தடைச் சட்டத்துக்கு முரணாக இருக்கக் கூடாது’ என தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், ஜிஎஸ்டி வரி தகவல்களை அமலாக்கத் துறையிடம் பகிர்ந்துகொள்ளவும் தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இன்றைய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன்,

  • ”கூட்டுறவுச் சங்கங்களுக்கு அளிக்கப்பட்ட பருத்திக்கு பழைய ஜிஎஸ்டி வரி பாக்கி ரத்து செய்யப்படுகிறது.

  • கேன்சர் மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்படும். செயற்கை ஜரிகைக்கு 12 சதவீதம் வரி விதிக்கப்பட்ட நிலையில், இனி ஐந்து சதவீதம் வரி விதிக்கப்படும்.

  • செயற்கைக்கோளை விண்ணில் ஏவும் சேவைக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் இத்தகைய சேவை வழங்கினால் அதற்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

  • ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் பந்தய விளையாட்டுகள் மீது 28% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்.

online gambling
online gamblingfile image
  • பணத்தைப் பந்தயம் வைத்து விளையாடும் கேசினோ அமைப்புகள் மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றிற்கும் 28% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்.

  • சில அரிய நோய்களுக்கான மருந்துகள் மற்றும் சிறப்பு உணவுகள் ஆகியவற்றுக்கும் ஜிஎஸ்டி வரியில் சலுகை அளிக்கப்படும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இத்தகைய அரிய நோய்களுக்கான மருந்துகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்படும்.

  • சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஜிஎஸ்டி தீர்ப்பாயங்கள் அமைக்க அனுமதி வழங்கப்படும். ஜிஎஸ்டி கவுன்சில் இதற்காக ஒரு சிறப்புக் குழுவை அமைக்கும். அனைத்து மாநிலங்களிலும் ஜிஎஸ்டி தொடர்பான முறையீடுகளை தீர்ப்பாயம் பரிசீலனை செய்யும். தமிழகத்தில் பல தீர்ப்பாயங்கள் அமைக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

ஜிஎஸ்டி கூட்டத்தில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

”ஜிஎஸ்டியின் கீழ் அமைக்கப்படும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திற்கு உறுப்பினர்களை நியமிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் தர வேண்டும்

புற்றுநோய்க்கான விலை உயர்ந்த மருந்துகளை வாங்க அளிக்கப்படும் வரிவிலக்கிற்கு தமிழ்நாடு அரசு ஆதரவு

சட்டவிரோத பணப் பரிவர்த்தனையை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவர தமிழ்நாடு அரசு எதிர்ப்பு; நாடெங்கும் சிறு வணிகர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் தமிழ்நாடு எதிர்க்கிறது” என்று தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்து இருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com