ஜூலையில் 8 முக்கிய துறைகளின் வளர்ச்சி 2.1% ஆக குறைவு
கடந்த ஜூலை மாதத்தில் 8 முக்கிய துறைகளின் வளர்ச்சி 2.1 சதவீதமாக குறைந்துள்ளது என்று மத்திய அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்திய பொருளாதாரத்தில் தற்போது தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நாட்டின் பொருளாதார வளர்ச்சி சதவிகிதம் குறைந்துள்ளது. எனவே பொருளாதாரத்தை சீரமைப்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அத்துடன் இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 5 சதவிகிதமாக குறைந்தது என்று மத்திய அரசு தரவுகள் தெரிவித்தன.
இந்நிலையில் கடந்த ஜூலை மாதத்தில் நாட்டின் முக்கியமான 8 துறைகளின் வளர்ச்சி 2.1 சதவிகிதமாக குறைந்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் தரவுகள் தெரிவித்துள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இந்த துறைகளின் வளர்ச்சி 7.3 சதவிகிதமாக இருந்தது. ஆனால் இந்த ஜூலை மாதத்தில் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உள்ளிட்டவை மிகவும் குறைந்த வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.
அதேபோல எஃகு, சிமெண்ட் மற்றும் மின்சாரம் ஆகியவற்றின் உற்பத்தி வளர்ச்சியும் கடந்த ஆண்டை விட மிகவும் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. அத்துடன் கடந்த ஏப்ரல்-ஜூலை காலளவில் முக்கியமான 8 துறைகளின் வளர்ச்சி வெறும் 3 சதவிகிதமாக இருந்துள்ளது. ஆனால் கடந்த 2018ஆம் ஆண்டு இதே காலளவில் இந்த 8 துறைகளின் வளர்ச்சி 5.9 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.