தாத்தா சொத்தில் பேரனுக்குப் பங்கு உண்டா? - உச்ச நீதிமன்றம் விளக்கம்!
தாத்தாவின் சொத்தில் பேரனுக்கு உரிமை உண்டா? இந்தக் கேள்விக்கு உச்ச நீதிமன்றம் முக்கியத்துவம் மிகுந்த பதிலைக் கொடுத்துள்ளது. இந்து வாரிசுரிமைச் சட்டத்தை ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள அந்தத் தீர்ப்பின் சாராம்சங்கள் என்னென்ன.. பார்க்கலாம்..
ராமகிருஷ்ணன் என்பவரின் சொத்துகள், 1994 இல் வாரிசுகளுக்கு இடையே பிரிக்கப்பட்டன. இதில் அவருடைய மகன் குமரனுக்குக் கிடைத்த மனையை, 1997இல் அவர் விற்றுவிட்டார். ஆனால், அது பூர்வீகச் சொத்து என்றும், பிறப்பால் தனக்கு அதில் பங்கு உண்டு என்றும் கூறி குமரனின் மகன் ராஜேஷ் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்குதான் பல விஷயங்களைத் தெளிவுபடுத்த உதவி இருக்கிறது.
1956ஆம் ஆண்டு இந்து வாரிசுரிமைச் சட்டப்பிரிவு 8இன் கீழ், உயில் எழுதாமல் இறந்துபோனவரின் சொத்து, முதல்நிலை வாரிசுகளுக்கு மட்டுமே செல்லும். இதில் மகன், மகள், மனைவி, தாய் மற்றும் ஏற்கெனவே இறந்த மகனின் மகன் ஆகியோர் அடங்குவர். ஆனால், உயிருடன் இருக்கும் மகனின் மகன் இதில் சேர்க்கப்படவில்லை. மேலும், பிரிவு 19இன் படி, வாரிசுகள் சொத்தைப் பிரித்துக்கொண்டவுடன், அது அவரவரின் தனிப்பட்ட சொத்தாக மாறிவிடுகிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தாத்தா இறந்து வாரிசுரிமை நடைமுறைக்கு வந்தபோது பேரன் பிறக்கவே இல்லை என்பதைச் சுட்டிக்காட்டினர்.
மேலும், பாகப்பிரிவினை நடந்த பிறகு அந்தச் சொத்து தந்தை குமரனின் தனிப்பட்ட சொத்தாகிவிட்டதால், அதை விற்பதற்கு அவருக்கு முழு உரிமை உண்டு என்றும், தந்தை உயிருடன் இருக்கும்வரை மகன் அதில் நேரடியாகப் பங்கு கோரமுடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சுருக்கமாகச் சொன்னால், தந்தை உயிருடன் இருக்கும்வரை, அவரால் பெறப்பட்ட தாத்தாவின் சொத்தில் மகன் நேரடியாகப் பங்கு கோர முடியாது.

