\
Grandfather Dies Rescuing Grandson From Borewell in Telangana
வெங்கண்ணா X

தெலங்கானா | ஆழ்துளை கிணற்றில் விழுந்த பேரன்.. மீட்க முயன்ற தாத்தா உயிரிழப்பு!

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள மிர்யாலகுடா பகுதியில், ஆழ்துளை கிணற்றில் விழுந்த நான்கு வயது பேரனை மீட்க முயன்ற தாத்தா, மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published on

தெலங்கானா மிர்யாலகுடா மண்டலத்திற்கு உட்பட்ட ஊட்லப்பள்ளி கிராமத்தின் வெளிப்பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில், நான்கு வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த திறந்தநிலை ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளான். சிறுவன் விழுவதைக் கண்ட அவனது தாத்தாவும், அந்த ஊரின் துணை சர்பஞ்ச்-யுமான வெங்கண்ணா (53), உடனடியாக சிறுவனை மீட்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவரும் எதிர்பாராதவிதமாக ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிக்கொண்டார்.

இது குறித்து, உள்ளூர் மக்கள் அளித்த தகவலின் பேரில், மிர்யாலகுடா ரூரல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளைத் தொடங்கினர். தீவிர முயற்சிக்குப் பிறகு, ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த தாத்தா மற்றும் பேரன் இருவரையும் போலீசார் பத்திரமாக வெளியே மீட்டனர். மீட்கப்பட்ட வெங்கண்ணா, ஆழ்துளை கிணற்றின் குறுகிய பகுதியில் சிக்கியிருந்ததால் ஏற்பட்ட கடும் மூச்சுத்திணறல் காரணமாக உடல்நிலை மோசமடைந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பேரனை காப்பாற்றத் துணிச்சலுடன் போராடிய தாத்தா உயிரிழந்தது அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மீட்கப்பட்ட சிறுவன் தற்போது நலமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Grandfather Dies Rescuing Grandson From Borewell in Telangana
அமெரிக்க எரிவாயு நிலையங்களை ஹேக் செய்த ஈரான்?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com