மகாராஷ்டிரா | சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து!
புதுடெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்த கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரயிலின் பார்சல் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. ரயில்வே ஊழியர்கள் விரைவாக செயல்பட்டு தீ பரவிய பெட்டியை துண்டித்தனர். இதனால் யாருக்கும் காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை. தீயணைப்பாளர்கள் தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
புதுடெல்லியில் இருந்து நேற்று மாலை 4 மணியளவில் கிளம்பிய கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை தாம்பரம் நோக்கி வந்து கொண்டிருந்து. அதன்படி, இன்று காலை 10 மணியளவில் மகாராஷ்டிராவின் நாக்பூர் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. தொடர்ந்து, கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரயில் அங்கிருந்து கிளம்பி மகாராஷ்டிராவின் வர்தா மாவட்டத்தில் உள்ள சிந்தி ரயில் நிலையம் அருகே வந்துகொண்டிருந்தபோது, ரயிலின் பார்சல் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.
அதைத் தொடர்ந்து, அருகிலிருக்கும் பெட்டியிலும் தீ பரவியுள்ளது. தீ பரவியதைப் பார்த்த பயணிகள் அலறினர். இதையடுத்து, ரயில்வே ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு தீ விபத்து ஏற்பட்ட பெட்டியை ரயிலில் இருந்து துண்டித்தனர். தொடர்ந்து, துண்டிக்கப்பட்டப் பெட்டி தனியாக எரிந்து கொண்டிருக்க மற்றப் பெட்டிகள் பாதுகாப்பாக சிந்தி ரயில் நிலையத்தில் துல்ஜாபூர் பிரிவில் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, இந்த விவாகரம் குறித்து விளக்கமளித்துள்ள மத்திய ரயில்வே செய்தித் தொடர்பாளர் சஞ்சய் முல்லே, ’’ரயில்வே ஊழியர் விரைவாக செயல்பட்டதன் காரணமாக இத்தீவிபத்தில் யாருக்கும் காயங்களோ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை. தொடர்ந்து, எரிந்து கொண்டிருந்த பெட்டியை தீயணைப்பாளர்கள் அணைத்திருக்கின்றனர். தொடர்ந்து, தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இவ்விசாரணக்குப் பிறேகே தீ விபத்துக்கான காரணம் தெரிய வரும்’’ எனத் தெரிவித்துள்ளார்
முன்னதாக, தீ விபத்து ஏற்பட்ட பெட்டியை விடுத்து மற்ற பெட்டிகளுடன் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை நோக்கி வந்துகொண்டிருக்கிறது.

