\
Gerrymandering Explained: How Electoral Boundaries Change
ஜெரிமேண்டரிங்Ai

எதிரிகளை எந்தத் தொகுதியிலும் வெல்ல முடியாமல் செய்வது - கவனம் பெறும் ‘ஜெரிமேண்டரிங்’ அரசியல்!!

இந்தியாவில் தொகுதி மறுவரையறை குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், ஜெரிமேண்டரிங் என்ற சொல் இப்போது அரசியல் களத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. அதென்ன ஜெரிமேண்டரிங்?. பார்க்கலாம்..
Published on: 

ஒரு அரசியல் கட்சி தங்களுக்குச் சாதகமாக அல்லது எதிர்த்தரப்பின் பலத்தைக் குறைக்கும் வகையில், தேர்தல் தொகுதிகளின் எல்லைகளைச் சூழ்ச்சியாக மாற்றி அமைக்கும் தந்திரத்தையே ஜெரிமேண்டரிங் (GERRYMANDERING) என்கிறார்கள். இந்தச் சொல்லுக்குப் பின்னால் 200 ஆண்டுகள் பழமையான ஒரு சுவாரசிய வரலாறு இருக்கிறது. 1812இல் அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநில ஆளுநராக இருந்த எல்ப்ரிட்ஜ் ஜெரி, தனது கட்சி ஜெயிக்க வேண்டும் என்பதற்காகத் தொகுதிகளின் எல்லைகளை வளைத்து வரைந்தார். அதில், ஒரு தொகுதியின் வரைபடம், சாலாமண்டர் எனும் பல்லி வடிவில் விசித்திரமாக அமைந்தது. இதனால் கடுப்பான பத்திரிகைகள், ஆளுநர் 'ஜெரி'யின் பெயரையும் ‘சாலாமண்டர்' என்ற சொல்லையும் இணைத்து ஜெரி- மேண்டர் எனக் கேலிச் சித்திரம் வெளியிட்டன. அதுவே இன்று வரை இந்த அரசியல் தந்திரத்திற்கான பெயராக நிலைத்துவிட்டது.

Ai

இதில் பல அரசியல் உத்திகள் பயன்படுத்தப்படுகின்றன. எதிர்க்கட்சி ஆதரவாளர்களை ஓரிரு தொகுதிகளுக்குள் மொத்தமாகக் குவித்து, மற்ற பெரும்பாலான தொகுதிகளில் ஆளும்கட்சி எளிதாக வெற்றி பெறுவது. எதிர்க்கட்சி வாக்குகளைப் பல தொகுதிகளுக்கு இடையே பிரித்து, அவர்களை எந்தத் தொகுதியிலும் ஜெயிக்க விடாமல் செய்வது. எதிர்க்கட்சியின் முக்கியப் பிரதிநிதிகளை ஒரே தொகுதிக்குள் மோதவிடுவது அல்லது அவர்களின் சொந்த வாக்கு வங்கியிலிருந்தே அவர்களைத் தனிமைப்படுத்துவது. இத்தகைய நடவடிக்கைகளால் குறிப்பிட்ட சமூக மக்களின் பிரதிநிதித்துவம் பறிபோய், அவர்களின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்படும் ஆபத்து உள்ளது.

ஆனால், இது எப்போதும் கை கொடுப்பதில்லை. சமீபத்தில் அமெரிக்க இடைத்தேர்தலில் டெக்சாஸ் மாநிலத்தில் எல்லைகளை மாற்றி அமைத்தும் ஆளும்கட்சியினர் பல இடங்களை இழந்தனர். வாக்காளர்களின் அலை மாறும்போது இந்த உத்தி தோற்றுப்போகும். இந்தியாவிலும் தொகுதி எண்ணிக்கையை உயர்த்த மத்திய அரசு திட்டமிடும் வேளையில், மாநிலங்களுக்குள் எல்லைகள் பிரிக்கப்படும்போது ஆளும்கட்சிக்குச் சாதகமாக 'ஜெரிமேண்டரிங்' நடந்துவிடக் கூடாது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கவலை தெரிவிக்கின்றன. எல்லைகள் எப்படி மாற்றப்பட்டாலும், ஜனநாயகத்தில் வாக்காளர்களின் தீர்ப்பும் நடுநிலைமையுமே இறுதியானது.

Gerrymandering Explained: How Electoral Boundaries Change
தங்கத்தை தொடர்ந்து எண்ணெய் பயன்பாட்டை குறைக்க கோரும் மோடி.. என்ன காரணம் ?