
தன்னை சிலர் தாக்கியதாக புகார் கூறிய ஜெர்மன் சுற்றுலா பயணி, போலி விசாவில் இந்தியாவுக்கு வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
ஜெர்மனில் உள்ள பெர்லினைச் சேர்ந்தவர் ஹோல்கர் எரிக் மிஸ்ச். இந்தியாவுக்கு சுற்றுலா வந்த இவர், பல்வேறு பகுதிகளை சுற்றிப் பார்த்தார். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்த அவர், கடந்த 3ம் தேதி ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். சோனபத்ரா மாவட்டத்தில் உள்ள ராபர்ட்ஸ்கஞ்ச் என்ற இடத்தில் ரயிலில் இருந்து இறங்கினார். அங்கு அமன்குமார் என்ற ரயில்வே ஊழியரிடம் வழி கேட்டார் ஜெர்மன் சுற்றுலா பயணி. இதையடுத்து நடந்த வாக்குவாதத்தில் அவரை கடுமையாகத் தாக்கியுள்ளார் அமன்குமார். ஜெர்மன் சுற்றுலாப் பயணி கொடுத்த புகாரை அடுத்து, அமன்குமார் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அந்த ஜெர்மன் பயணி, போலி விசாவில் இந்தியாவுக்கு வந்திருப்பதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுபற்றி, ராபர்ட்ஸ்கஞ்ச் போலீஸ் எஸ்.பி, ஆர்.பி.சிங் கூறும்போது, ‘அந்த ஜெர்மன் பயணியிடம் டூரிஸ்ட் விசா இல்லை. போலி விசாவை காட்டி இங்கு வந்துள்ளார். இதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது’ என்றார்.