ஜெனரல் நரவனே எழுதிய புத்தகம் | ராகுலுக்கு கிடைத்தது எப்படி? தொடங்கியது விசாரணை!
முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம்.நரவனேவின் வெளியாகாத சுயசரிதை புத்தகம் இணையதளத்தில் கசிந்தது தொடர்பாக டெல்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
எம்.எம்.நரவனேவின் FOUR STARS OF DESTINY என்ற புத்தகம் வெளியிடப்படாத நிலையில், இந்த புத்தகத்தின் பிரதிகளைக் காண்பித்து, நாடாளுமன்றத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்ராகுல் காந்தி, இந்திய-சீனா எல்லை மோதல் குறித்து சரமாரி புகார்களை முன்வைத்தார். அதாவது, 1962ஆம் ஆண்டுக்குப் பிறகு நடந்த மிகப்பெரிய இந்தியா - சீனா மோதல்களில் ஒன்றை மேற்பார்வையிட்ட முன்னாள் ராணுவத் தலைவர் ஜெனரல் எம்.எம். நரவனேவால் எழுதப்பட்ட அந்தப் புத்தகம் வெளியிடப்படாமலேயே ராகுல் காந்திக்கு கிடைத்தது எப்படி என்பதுதான் தற்போதைய கேள்வியாக உள்ளது. அதிலும் கையெழுத்துப் பிரதிகூட இல்லை, ஒரிஜினல் அச்சுப் பிரதி. பாதுகாப்பு அமைச்சகத்தின் (MoD) அனுமதி இல்லாமல் அச்சகத்திற்குச் செல்லாத அந்தப் பிரதி வெளியானது எப்படி என்பது காவல் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. ஓய்வுபெற்ற உயர் ராணுவ அதிகாரிகள், தங்களின் அனுபவங்களை புத்தகமாக எழுதும்போது, அரசாங்க ரகசிய சட்டத்தின்கீழ் மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெறவேண்டும். இந்த புத்தகத்திற்கு இன்னும் அனுமதி கிடைக்காத நிலையில், டெல்லி காவல் துறையினர் இதுகுறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அதேநேரத்தில், இந்த புத்தகம் மத்திய அரசின் அனுமதி பெறுவதற்கு முன்பே, ஏப்ரல் 2024இல் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. புத்தகங்கள் விற்பனைக்கு வந்தது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது.
இதற்கிடையே, முன்னாள் இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே எழுதியதாக கூறப்படும்‘ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி’நினைவுக் குறிப்பு புத்தகம் இதுவரை வெளியிடப்படவில்லை என Penguin பதிப்பகம் விளக்கம் அளித்துள்ளது. அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், புத்தகத்தை அச்சு அல்லது டிஜிட்டல் வடிவில் இதுவரை வெளியிடவில்லை என்றும், எந்தப் பிரதியும் விநியோகிக்கப்படவோ விற்பனைக்கு வரவோ இல்லை என்றும் தெரிவித்துள்ளது. மேலும், ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் தளங்களில் புழக்கத்தில் உள்ளதாக கூறப்படும்பிடிஎஃப் உள்ளிட்ட எந்த வடிவங்களும் பதிப்புரிமை மீறலாக கருதப்படும் என்றும், அவற்றை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தலைவர்களால் எழுதப்பட்ட புத்தகங்கள் உலகம் முழுவதும் ஆர்வத்துடன் படிக்கப்படுகின்றன. அவர்கள், தங்கள் போர்க்களத்தில் ஏற்பட்ட அனுபவங்களைப் புத்தகங்களாக எழுதுகின்றனர். அவர் மத்திய அரசாங்க அனுமதி பெற்று வெளியிடப்படுகிறது. ஒரு புத்தகம் அச்சிடப்பட்டு ஒரு புத்தகமாக பிணைக்கப்படுவதற்கு முன்பு, அச்சுப்பிரதியாகவோ அல்லது கையெழுத்துப் பிரதியாகவோ பாதுகாப்பு அமைச்சகத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பப்படுகிறது. அந்த வகையில், ஜெனரல் நாரவனேவின் புத்தகமான ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி ஒரு விதிவிலக்கான புத்தகமாகும். 2020 மற்றும் 2024க்கு இடையில் பாதுகாப்பு அமைச்சகம் 35 புத்தகங்களுக்கு அனுமதி அளித்துள்ளது, மேலும் ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி என்ற ஒரே கையெழுத்துப் பிரதி இன்னும் நிலுவையில் உள்ளது.
இந்தியாவில், ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் புத்தகங்களை வெளியிடுவதில் இராணுவச் சட்டம், 1950 அல்லது இராணுவ விதிகள், 1954 ஆகியவற்றால் கட்டுப்படுவதில்லை. காரணம், அந்த விதி பணியாற்றும் வீரர்களுக்கே பொருந்தும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், 1923ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டம் அமலில் உள்ளது, இது வாழ்நாள் முழுவதும் பொருந்தும். ஓய்வு பெற்று எத்தனை ஆண்டுகள் கடந்துவிட்டாலும், தேசிய பாதுகாப்பு, இந்தியாவின் இறையாண்மை அல்லது வெளிநாட்டு நாடுகளுடனான நட்புறவுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு ரகசியத் தகவல் அல்லது பொருளையும் வெளியிடுவது குற்றமாகும் என இந்தியா டுடே ஊடகம் தெரிவித்துள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

