தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்., ஜனநாயக பட விவகாரத்தில் ராகுல் காந்தி விஜய்க்கு ஆதரவு.!
ஹெச்.வினோத் இயக்கத்தில், விஜயின் கடைசிப் படமாக உருவாகி இருக்கும் ‘ஜனநாயகன்’ படம், ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தணிக்கைச் சான்றிதழ் விவகாரம் தொடர்பாக ஜனநாயகன் திரைப்படம் வழக்கை எதிர்கொண்டுள்ளது. இந்த நிலையில், ஜனநாயகன் பட விவகாரத்தில் மத்திய அரசும், தணிக்கை வாரியமும் உள்நோக்கத்துடன் செயல்படுகிறது என இப்படத்திற்கு தமிழக அரசியல் கட்சிகளிலிருந்து தொடர்ந்து ஆதரவுக் குரல்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி கூட்டணி வைக்கலாம் எனப் பேசப்பட்டு வரும்நிலையில், ஜனநாயகனுக்கு தொடர்ச்சியான ஆதரவுக் குரல்கள் தமிழக காங்கிரஸிலிருந்து எழுந்து வந்தன.
இந்த நிலையில் தான், காங்கிரஸின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி ஜனநாயகன் திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அப்பதிவில், “தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைத் தடை செய்யும் முயற்சி, தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரான தாக்குதலாகும். தமிழக மக்களின் குரலை ஒடுக்கும் முயற்சியில் பிரதமர் மோடி ஒருபோதும் வெற்றிபெற முடியாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டெல்லியில் கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணையை எதிர்கொண்டு, இன்று தவெக தலைவர் விஜய் சென்னை திரும்பியிருக்கும் நிலையில், ஜனநாயகன் படத்திற்கு ராகுல்காந்தி ஆதரவு தெரிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

