"ஆண்டுக்கொரு பிரதமர் பதவியேற்பார்கள்" |பிரதமர் மோடி - ராகுல் காந்தி இடையே வலுக்கும் வார்த்தைப் போர்!
முதற்கட்ட தேர்தல் முடிவடைந்தது. இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. நாளை 88 தொகுதிகளில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைப்பெறுகிறது. தற்போது, இதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. ஆனால், பரப்புரையின் போது அரசியல் கட்சிகள் ஒன்றை ஒன்றை விமர்சித்து கொண்டு தேர்தல் களத்தை இன்னும் சூடுபிடிக்க செய்துள்ளது.
இந்தவகையில், பிரதமர் மோடிக்கும், காங்கிரஸ் ராகுல் காந்திக்கும் இடையேயான வார்த்தை போர் தினத்திற்கொன்று என்ற வகையில் கடுமையாக ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த வரிசையில், இந்தியா கூட்டணிக் கட்சிகள் பிரதமர் நாற்காலியை ஏலம் விடுவதாக பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார்.
INDIA கூட்டணியினர் பிரதமர் நாற்காலியை ஏலம் விடுவதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு
மத்திய பிரதேசத்தில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய அவர்,”மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் ஆண்டுக்கொரு பிரதமர் பதவியேற்பார்கள். ஒரு ஆண்டுக்கு ஒரு பிரதமர் என்பதே இந்தியா கூட்டணியின் திட்டம். இதனை நாட்டு மக்கள் விரும்புகிறீர்களா?.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது ஆந்திரவில் மதம் அடிப்படையிலான ஒதுக்கீட்டை அறிமுகம் செய்தது. ஆனால் அது அவர்களுக்கு கைக்கொடுக்காததால் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை பறிக்கும் திட்டத்தை காங்கிரஸ் கையாண்டு வருகிறது.” என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
"பிரதமரின் இந்த செயலை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்"- ராகுல் காந்தி
பிரதமரின் குற்றச்சாட்டு ஒரு புறம் இருக்க, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியும் இவருக்கு எதிரான குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
அதில், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதற்கு பதிலாக பிரதமர் மோடி தனது பணக்கார நண்பர்களின் 16 லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
சமூக வலைத்தளமான எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, ”நாட்டு மக்கள் பிரதமரின் இந்த செயலை மன்னிக்க மாட்டார்கள். பிரதமர் மோடி தனது பணக்கார நண்பர்களுக்காக தள்ளுபடி செய்த கடன் தொகையை கொண்டு 16 கோடி இளைஞர்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை அளித்து இருக்கலாம்.
10 கோடி விவசாய குடும்பங்களின் கடன்களை தள்ளுபடி செய்யப்பட்டு எண்ணற்ற தற்கொலைகளை தடுத்து இருக்கலாம். சிலிண்டர் விலையை குறைத்து இருக்கலாம், ராணுவத்திற்கு கூடுதல் நிதியை ஒதுக்கி இருக்கலாம். மக்களின் வலிகளை அந்த பணத்தால் போக்கி இருக்கலாம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் தற்போதைய நிலை மாறும். இந்தியர்களின் வளர்ச்சிக்கான அரசை காங்கிரஸ் வழிநடத்தும்.” என்று தெரிவித்துள்ளார்.