\
5 சதவீதத்திற்கும் கீழ் பொருளாதார வளர்ச்சி - 6 ஆண்டுகளில் இல்லாத சரிவு !

5 சதவீதத்திற்கும் கீழ் பொருளாதார வளர்ச்சி - 6 ஆண்டுகளில் இல்லாத சரிவு !

5 சதவீதத்திற்கும் கீழ் பொருளாதார வளர்ச்சி - 6 ஆண்டுகளில் இல்லாத சரிவு !
Published on

இரண்டாம் காலாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி விகிதம் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் குறைந்துள்ளது. 

இந்திய பொருளாதாரத்தில் தற்போது மந்தநிலை ஏற்பட்டுள்ளதாக வல்லுநர்கள் பலர் தெரிவித்து வருகின்றனர். இதன்காரணமாக இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி மிகவும் குறைந்து வருகிறது. அந்தவகையில் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான இரண்டாம் காலாண்டிற்கான இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதத்தை நேற்று மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இரண்டாவது காலாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் 4.5 சதவிகிதமாக குறைந்துள்ளது. 

ஏற்கெனவே இந்தாண்டின் முதல் காலாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 5 சதவிகிதமாக இருந்தது. தற்போது அது குறைந்து 4.5 சதவிகிதமாக உள்ளது. இது கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் குறைந்த பொருளாதார வளர்ச்சி ஆகும். அரசின் தரவுகளின்படி உற்பத்தி துறையில் வளர்ச்சி மிகவும் குறைந்துள்ளது. விவசாயம், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளில் பொருளாதார வளர்ச்சி மிகவும் குறைந்துள்ளது. 

இந்த பொருளாதார வளர்ச்சி தொடர்பாக மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் அடனு சக்ரபர்த்தி, “இந்திய பொருளாதாரத்தின் அடித்தளம் நன்றாக தான் உள்ளது. பொருளாதார வளர்ச்சி மூன்றாவது காலாண்டில் அதிகரிக்கும். அத்துடன் பன்னாட்டு நிதியம் (ஐ.எம்.எஃப்) தனது அறிக்கையில் 2019-20ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.1ஆக இருக்கும் என்று கணித்துள்ளது. அதன்படி இந்திய பொருளாதாரம் அடுத்த காலாண்டில் வளர்ச்சி அடையும்” எனத் தெரிவித்துள்ளார். 

நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து முன்னாள் பிரதமரும் பொருளாதார வல்லுநருமான மன்மோகன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “ இந்திய பொருளாதாரத்தில் தற்போதைய நிலை மிகவும் பயப்படும் சூழலில் உள்ளது. முதலாம் காலாண்டிலிருந்த பொருளாதார வளர்ச்சி இரண்டாம் காலாண்டில் மிகவும் குறைந்துள்ளது. இந்த நிலை இந்திய பொருளாதாரத்தில் மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக இந்திய பொருளாதாரம் குறித்து மாநிலங்களவையில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “இந்திய பொருளாதாரத்தில் மந்தநிலை எதுவும் தற்போது இல்லை” எனத் தெரிவித்திருந்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com