டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பா? இபிஎஸ்-க்கு அரசு விளக்கம்!
திமுக அரசின் திறனற்ற நிர்வாகத்தால் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி, டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெறவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில், "அதிமுக ஆட்சிக்காலங்களில் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில், தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி இடம் பெறுவது மரபு.
ஆனால், திமுக அரசின் தவறான நிர்வாகத்தால், இந்தாண்டும் தமிழ்நாட்டின் ஊர்தி இடம்பெறாத வெட்கக்கேடான நிலை உருவாகியுள்ளது. ஸ்டாலின் அரசின் தொடர் அலட்சிய நிர்வாகத்திற்கும், ஊர்திக்கு அனுமதி வழங்காத மத்திய அரசுக்கும், கடுமையான கண்டனங்கள்" என கூறியுள்ளார்.
இதையடுத்து, டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதாக வதந்தி பரப்பப்படுவதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. 2025ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில், தலைநகர் டெல்லியில் வருடந்தோறும் நடக்கின்ற அணிவகுப்பில், தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதாக தவறான தகவல் பரப்பப்படுவதாக தமிழக அரசின் தகவல் சரிபார்ப்புக்குழு தெரிவித்துள்ளது.
அந்த விளக்கத்தில், “டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பில் 15 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் அணிவகுப்பு அலங்கார ஊர்தி பங்கேற்க தேர்வு செய்யப்படும். ஆனால், சுழற்சி முறையில் மட்டுமே அனுமதிக்கப்படுவது. அனைத்து மாநிலங்களாலும் எல்லா ஆண்டுகளிலும் பங்கேற்க இயலாது. 2024 அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி பங்கேற்றது. இனி 2026 ஆண்டு அணிவகுப்பிலே பங்கேற்க இயலும்” என்றும் தமிழக அரசின் தகவல் சரிபார்ப்புக்குழு தெளிவுபடுத்தியுள்ளது.