தெலங்கானா | BRS கட்சியிலிருந்து நீக்கப்பட்ட Ex CM மகள்.. புதிய கட்சிக்கு அச்சாரம்!
தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகளான கே.கவிதா புதிய கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார்.
தெலங்கானாவில் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. அக்கட்சி, கடந்த பிஆர்எஸ் ஆட்சியின்போது நடந்த முறைகேடுகள் தொடர்பாக குற்றஞ்சாட்டி வருகிறது. தவிர, சிபிஐ விசாரணைக்கும் ஆளும் காங்கிரஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, கே.சந்திரசேகர் ராவின் மகளான கே.கவிதா, பி.ஆர்.எஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் தனது உறவினர்களுமான ஹரிஷ் ராவ் மற்றும் சந்தோஷ் குமார் ஆகியோர் மீது குற்றஞ்சாட்டியிருந்தார். கவிதாவின் இந்தக் குற்றச்சாட்டுகள் கட்சிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் கட்சி விரோத நடவடிக்கைளுக்காக கவிதாவை அவரது தந்தையும் முன்னாள் முதல்வருமான சந்திரசேகர் ராவ் இடைநீக்கம் செய்தார். இதைத் தொடர்ந்து அவர், பி.ஆர்.எஸ். கட்சியில் இருந்தும் விலகினார்.
2025 செப்டம்பர் மாதம் பி.ஆர்.எஸ் கட்சியில் இருந்து அவர் விலகிய நிலையில், தெலங்கானாவில் ஓர் அரசியல் கட்சியை தற்போது உருவாக்கப் போவதாக கல்வகுந்த்லா கவிதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ”நான் ஒரு சக்தியாகத் திரும்புவேன். தெலங்கானாவில் ஓர் அரசியல் அமைப்பை உருவாக்குவேன். அது, அடுத்த தேர்தலில் போட்டியிடும்” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக, அவர் தந்தையின் கட்சியான பி.ஆர்.எஸ். கட்சியைக் கடுமையாக விமர்சித்தார்.

