எனக்கே இந்த கதியா.? முன்னாள் இந்திய தூதருக்கே சவாலாகும் SIR.. குடியுரிமையை நிரூபிக்க நோட்டீஸ்!!
தேர்தல் ஆணைய அதிகாரிகள் தனது குடியுரிமையை நிரூபிக்க நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக, ஓய்வுபெற்ற இந்திய வெளியுறவுப் பணி அதிகாரியும் முன்னாள் இந்திய தூதருமான நவதீப் சூரி கவலை தெரிவித்ததுடன் தனக்கே இந்த கதி என்றால் மக்களின் நிலைமை என கேள்வி எழுப்பியிருக்கிறார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் எனப்படும் எஸ்.ஐ.ஆர். குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வரும் வேளையில், முன்னாள் இந்திய தூதர் ஒருவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளன.
பிகாரில் கடந்த 2025-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, ஜூன் 24ம் தேதி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை (எஸ்.ஐ.ஆர்) இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இப்பணிகளின் முடிவில், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்களர் அட்டைகளை பெற்றிருந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள், வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தவர்கள் என 65 லட்சத்திற்கு மேற்பட்ட வாக்களர்கள் அம்மாநிலத்தில் நீக்கப்பட்டனர். இது, இந்திய அளவில் பேசுபொருளான நிலையில், சிறுபான்மையினர் மற்றும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களை குறிவைத்து பாஜக அரசு நீக்கம் செய்வதாக, எஸ்.ஐ.ஆர்-க்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகள் போராட்டங்களை நடத்தி வந்தன.
இதற்கிடையில், இரண்டாம் கட்டமாக தமிழ்நாடு, கேரளா, உத்திர பிரதேசம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான எஸ்.ஐ.ஆர். அறிவிப்பை கடந்த ஆண்டு அக்டோபர் 27-அன்று அறிவிப்பை வெளியிட்டு பணிகளைத் தொடங்கியது. அதன்படி, இந்த மாநிலங்களில் ஏறக்குறைய 5.18 கோடி வாக்களர்கள் நீக்கப்பட்டனர். இந்தச்சூழலில், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட விடுபட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 3-ம் கட்டமாக எஸ்.ஐ.ஆர். பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
இந்தநிலையில், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் வசிக்கும் ஓய்வுபெற்ற இந்திய வெளியுறவுப் பணி அதிகாரியும் முன்னாள் இந்திய தூதருமான நவதீப் சூரிக்கு குடியுரிமையை நிரூபிக்க தேர்தல் ஆணைய அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், மூன்று நாடுகளுக்கு இந்தியாவின் தூதராகப் பணியாற்றிய எனக்கே குடியுரிமையைச் சான்றளிக்க இவ்வளவு கெடுபிடிகள் என்றால், நாட்டின் சாதாரண குடிமகனின் நிலை என்னவாகும்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளது, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வு குறித்து மேலும் ஒரு சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
இந்த விவகாரம் சர்ச்சையானதை அடுத்து, பஞ்சாப் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அனிந்திதா மித்ரா விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "முன்னாள் தூதர் நவதீப் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலின் வரைவு நகலில் இருந்து நீக்கப்படவில்லை. 2003-ஆம் ஆண்டு தரவுகளோடு அவரது பெயர் இணைக்கப்படாததால், நடைமுறைப்படி கூடுதல் ஆவணங்களைக் கேட்டு அவருக்கு நோட்டீஸ் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்தவுடன் அவரது வாக்காளர் பதிவு சுமுகமாக நிறைவடையும்" எனத் தெரிவித்திருக்கிறார்.
சுமார் 36 ஆண்டுகள் இந்திய வெளியுறவுத் துறையில் பணியாற்றிய நவதீப் சூரி, ஐக்கிய அரபு அமீரகம் (UAE), எகிப்து நாட்டின் தூதராகவும், ஆஸ்திரேலியாவிற்கான இந்திய உயர் ஆணையராகவும் பணியாற்றியவர். ஐக்கிய அரபு அமீரகத்துடனான இந்தியாவின் உறவை வலுப்படுத்தியதற்காக அந்நாட்டின் இரண்டாவது உயரிய சிவிலியன் விருதான 'ஆர்டர் ஆஃப் சையத் II' விருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச்சூழலில் தான், முன்னாள் இந்திய தூதருக்கே குடியுரிமையை நிரூபிக்க தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியிருக்கும் சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது.

