ஜம்மு, ராஜஸ்தானில் பாக். ட்ரோன் தாக்குதல்.. இருளில் மூழ்கிய நகரங்கள்.. ஐபிஎல் போட்டி ரத்து!
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, ’ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், நேற்று அதிகாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் மீது இந்திய ராணுவம் துல்லியத் தாக்குதல் நடத்தியது. இதில் 100 பேர் பலியாகி இருப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக இந்திய - பாகிஸ்தான் எல்லைகளில் பதற்றம் நிலவுகிறது. அதேநேரத்தில், இதற்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில் பாகிஸ்தான் ராணுவம், எல்லைப் பகுதியில் அப்பாவி மக்களைக் குறிவைத்து தாக்கியது. மேலும், ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலமாகவும் தாக்குதல் நடத்தியது. எனினும், இந்தியா இதற்குத் தக்க பதிலடியும் கொடுத்து வருகிறது. பாகிஸ்தானின் ஏவுகணைகளை இந்திய ராணுவம் இடைமறித்து வெற்றிகரமாக தாக்கி அழித்து வருகிறது. அத்துடன் பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் மீது சரமாரி ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதில் லாகூர் பாதுகாப்பு சிஸ்டம் அழிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது பாகிஸ்தான், ஜம்மு விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தியது. எனினும், இதையும் இந்திய ராணுவம் வழிமறித்து அழித்துள்ளது. மேலும் பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல் காரணமாக ஜம்முவின் அக்னூர், கிஸ்த்வார், சம்பா மற்றும் பல பகுதிகளில் சைரன் ஒலிக்கவிடப்பட்டுள்ளது. தவிர, மின்சாரமும் தடை செய்யப்பட்டு பல நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன. இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். மறுபுறம், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய பகுதிகளிலும் பதற்றம் நிலவுகிறது. அங்கே பாகிஸ்தான் ஏவுகணைகளை வீசியதாகவும், அதை இந்தியா வழிமறித்து தகர்த்ததாகவும் தற்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன. பஞ்சாப்பின் அமிர்தசரஸிலும் நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன. இதற்கிடையே, தர்மசாலாவில் இன்று நடைபெற்ற டெல்லி - பஞ்சாப் ஐபிஎல் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.