மகாராஷ்டிரா|நடுக்கடலில் பற்றி எரிந்த தீ.. கூச்சலிட்ட 18 மீனவர்கள்; மீட்கப்பட்டனரா?
மகாராஷ்டிராவில் கடலில் மீன்பிடிக்க சென்ற 18 மீனவர்களை உள்ளடக்கிய மீன்பிடி படகு ஒன்று தீடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள அலிபாக் அருகே கடற்கரையிலிருந்து சுமார் 6-7 கடல் மைல் தொலைவில் கடந்த வியாழன்கிழமை அன்று, அதிகாலை 3 -4 மணி அளவில் மீன்பிடிக்க சென்ற தனியார் படகு ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை அறிந்த அப்படகிலிருந்து 18 மீனவர்களும் அச்சத்தில் கத்தி கூச்சலிடத்தொடங்கினர்.
சம்பவத்தின்போது, அந்த வழியே சென்ற இந்திய கடலோர காவல் படையை சேர்ந்த சாவித்ரிபாய் புலே என்ற கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தது. அப்போது, இந்த மீன்பிடி கப்பல் தீப்பிடித்து எரிந்தபோது, அதனை ரோந்து கப்பலில் இருந்தவர்கள் பார்த்து உள்ளனர்.
உடனடியாக, இருண்ட சவாலான சூழலில் மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக செயல்படுத்தியுள்ளனர். இதனால், படகிலிருந்த 18 மீனவர்களும் பத்திரமாக மற்றொரு படகிற்கு மாற்றப்பட்டனர். இதனை கடலோர காவல்படையினர் உறுதிப்படுத்தினர்.
இந்நிலையில், தீயை கட்டுக்குள் கொண்டு வரவும் மேலும் சேதத்தைத் தடுக்கவும் மீட்புத்துறையினர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும், எதனால், தீ விபத்து ஏற்பட்டது என்பது குறித்த விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீட்கப்பட்டவர்கள் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தீவிர காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.