இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! போலி காவல் நிலையம் நடத்தி வசூல் வேட்டை.. பீகாரில் நடந்த ’பலே’ சம்பவம்!
இன்றைய அறிவியல் உலகு, விரல் நுனியில் இருப்பதாகப் பலரால் கூறப்பட்டாலும், அதற்கேற்றபடி போலிகளும் அதிகரித்து வருவதுதான் வியப்பான செய்தியாக உள்ளது. ஆன்லைன், டிஜிட்டல் உள்ளிட்டவற்றைத் தவிர்த்து நிஜ உலகிலும் போலிகள் அதிகரித்து வருகின்றன. அதிலும் நம் நாட்டில், போலியாக ஒரு காவல் நிலையம் செயல்பட்டிருப்பதுதான் சமூக ஊடகங்களில் தற்போதைய வைரல் செய்தியாக உள்ளது.
பீகார் மாநிலம் பூர்னியா மாவட்டத்தில் உள்ள மோஹானி கிராமத்தில்தான் இந்தக் காவல் நிலையம் செயல்பட்டு வந்துள்ளது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த அதிக குற்றப் பின்னணியைக் கொண்டவராக அறியப்படும் ராகுல் குமார் என்ற நபர், கிராமின் ரக்ஷா தளம் அமைப்பில் ஜவான்கள் மற்றும் காவலர்களாக சேருவதற்காக ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
அப்பணத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு போலியான போலீஸ் சீருடைகள், அடையாள அட்டைகளை வழங்கியுள்ளார். மேலும், மதுபானக் கடத்தலுக்கு எதிராக சோதனைகளை நடத்தவும், வாகனங்களைச் சரிபார்க்கவும் அவர்களைப் பணியமர்த்தியதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், அவர்கள் கெருவா காட் மற்றும் காந்தி காட் பாலத்தில் வாகனங்களைச் சோதனை செய்து, உரிமையாளர்களுக்கு ரூ.400 வரை அபராதம் விதித்துள்ளனர். இதற்காக, ராகுல் போலியாய் ரோந்து குழு ஒன்றையும் அமைத்துள்ளார். வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்படும் ரூ.400இல் பாதியை அந்த ரோந்து குழுவுக்குக் கொடுத்து போலி இளைஞர் போலீசார்களை நம்பவைத்துள்ளார். மேலும் பணம் கட்டாதவர்களுடைய வாகனங்களை, மோஹானி பஞ்சாயத்தில் உள்ள ஒரு பள்ளியை போலி காவல் நிலையமாக மாற்றி, அங்கு கொண்டுபோய் வைக்க உத்தரவிட்டுள்ளார். அங்கேயும் மதுபான கடத்தல்காரர்களின் வாகனங்கள் மற்றும் மதுபானங்களை விடுவிப்பதற்காக பணம் பறிக்கப்பட்டு உள்ளது.
இதில் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால், உள்ளூர் கிராமத் தலைவரான ஷியாம் சுந்தர் ஓரான் மற்றும் அவரது மருமகன் சினோத் ஓரான் ஆகிய இருவரும் இந்தக் காவல் நிலையத்தின் ஒரு பகுதியாக இருந்துள்ளனர். அவர்கள், குடியரசு தின விழாவில் போலி ஜவான்கள் மற்றும் காவலர்களை கெளரவித்துள்ளனர். தவிர, இந்தப் போலி காவல் நிலையம் பல மாதங்களாக உள்ளூர் நிர்வாகத்திற்குத் தெரியாமல் தெரியாமலேயே இருந்துள்ளது.
மேலும், இந்த போலி காவல் நிலையத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பல பொது பிரதிநிதிகள் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்பட்ட நிலையிலேயே, இந்த போலி காவல் நிலையத்தின் செய்தி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உள்ளூர் நிர்வாகத்தின் துணையின்றி இதுபோன்ற மோசடி தொடர முடியாது என்று கிராம மக்கள் கருதுகின்றனர்.
இதைத் தொடர்ந்து விசாரணையில் இறங்கியுள்ள போலீசார், ராகுல் குமாரையும் ரோந்துக் குழுவில் செயல்பட்ட அவரது நண்பரையும் பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து முன்னாள் அமைச்சரும் கஸ்பா சட்டமன்ற உறுப்பினருமான முகமது அஃபாக் ஆலம், உள்ளூர் காவல் கண்காணிப்பாளர் (SP) கார்த்திகேய கே சர்மாவிடம் ”இந்த விவகாரம் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும்” என்று கோரியுள்ளார். இந்த மோசடியில் சில உயர் அதிகாரிகளின் தொடர்பு குறித்து அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த 2022ஆம் ஆண்டு, இதே பீகார் மாநிலத்தில் பாங்கா நகரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலை தேர்ந்தெடுத்த ரவுடிக் கும்பல் ஒன்று அங்குள்ள ஓர் அறையை வாடகைக்கு எடுத்து அதை காவல் நிலையமாக மாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதுபோல், குஜராத்தில் போலிச் சுங்கச்சாவடி அமைத்து வசூலில் ஈடுபட்டதும் வெளிச்சத்திற்கு வந்தது. அந்த வகையில், இந்த போலி காவல் நிலையமும் சேர்ந்துள்ளது.