பீகார்: போலி காவல் நிலையம் நடத்தி வசூலை வாரிக் குவித்த ரவுடிக் கும்பல்? சிக்கியது எப்படி?

பீகார்: போலி காவல் நிலையம் நடத்தி வசூலை வாரிக் குவித்த ரவுடிக் கும்பல்? சிக்கியது எப்படி?
பீகார்: போலி காவல் நிலையம் நடத்தி வசூலை வாரிக் குவித்த ரவுடிக் கும்பல்? சிக்கியது எப்படி?

பீகார் மாநிலத்தில் 8 மாதங்களாக போலி காவல்நிலையம் நடத்தி வந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.

பீகார் மாநிலத்தில் பாங்கா மாவட்டத்தில் இயங்கி வந்த ரவுடிக் கும்பல் ஒன்று கொலை, கொள்ளை, கடத்தல், பணப்பறிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளது. இதையடுத்து ஒரு படி மேலே சென்று போலியாக ஒரு காவல் நிலையத்தையே நடத்திமக்களிடம் இருந்து பணம் பறித்து வசூல் வேட்டையை நடத்தியுள்ளது இந்த கும்பல்.

கடந்த ஜனவரி மாதம் பாங்கா நகரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலை தேர்ந்தெடுத்த இந்த ரவுடிக் கும்பல் அங்குள்ள ஒரு அறையை வாடகைக்கு எடுத்து அதை காவல் நிலையமாக மாற்றியுள்ளது. இந்த கும்பலில் இரு பெண்களும் அடங்குவர். காவலர், தலைமைக் காவலர், சப்-இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர் என்ற ரேங்க் வாரியாக போலீஸ் உடைகளையும் வாங்கி அணிந்து கொண்டு காவலர்களை போலவே வலம் வந்துள்ளனர். இதில் ஒரு விநோதம் என்னவென்றால் அப்பகுதியில் உள்ள நிஜ போலீஸ் உயரதிகாரியின் வீட்டுக்கு பக்கத்தில்தான் (500 மீட்டர் தொலைவில்) அவர்கள் போலி காவல் நிலையத்தை அமைத்திருந்தனர்.

காவல் நிலையம் அமைக்கப்பட்ட ஓரிரு நாட்களிலேயே அப்பகுதி மக்கள் புகார் கொடுக்க காவல் நிலையத்திற்கு வர தொடங்கினர். அவ்வாறு வரும் மக்களிடம் இருந்து அவர்களிடம் உள்ள புகாரை பொறுத்து அவற்றை தீர்த்து வைப்பதற்கு ரவுடி போலீசார் பணம் வசூலிக்க தொடங்கினர். அப்பகுதிகளில் உள்ள கடைகளில் இருந்தும் அவர்கள் மாமூல் வசூலிக்க தொடங்கினர். இதனால் மாதந்தோறும் 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை அவர்களுக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு கடந்த 8 மாதங்களாக போலி காவல் நிலையத்தை அவர்கள் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த நிஜ போலீஸ் ஒருவர் இந்த போலி போலீசில் ஒருவரை பிடித்து உள்ளார். இதன் தொடர்ச்சியாக, சம்பந்தப்பட்ட நபர்கள் போலி போலீசார் என்பதும், போலி போலீஸ் நிலையத்தை அவர்கள் நடத்தி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 16-ம் தேதியன்று போலி காவல் நிலையத்துக்கு சென்ற 10-க்கும் மேற்பட்ட போலீசார், போலீஸ் உடையில் இருந்த 6 ரவுடிகளை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கிகள், போலி முத்திரைகள் உள்ளிட்ட ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com