பத்தமடை பாய் To காஞ்சி பட்டு | விருந்தினர்களுக்கு பரிசாக தமிழ்நாட்டின் சிறப்பு வாய்ந்த பொருட்கள்!
தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் கலந்து கொள்ளும் விருந்தினர்களுக்கு தமிழகத்தின் பெருமையை நிலைநாட்டும் வகையில் அவர்களுக்கு பரிசாக வழங்கப்பட பெட்டியில் இருப்பது என்ன?... பார்க்கலாம்.
மத்திய அரசு 2026 ஆம் ஆண்டில் மக்களவை தொகுதிகளின் எணிக்கையை மறுசீரமைப்பு செய்ய உள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகளை மறுவரையறை செய்தால், தங்கள் மாநிலத்தில் தொகுதிகள் எண்ணிக்கை குறைந்து, நாடாளுமன்றத்தில் மாநிலத்தின் பிரதிநிதித்துவம் குறையும் என்பதால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அந்த வகையில், தான் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் நியாமற்ற மக்களவை தொகுதி மறுவரையறையை தொடர்பான கூட்டு நடவடிக்கை குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் கேரளா, தெலங்கானா, பஞ்சாப் ஆகிய 3 மாநில முதல்வர்கள் பங்கேற்கின்றனர். அதுமட்டுமின்றி 20க்கும் மேற்பட்ட அரசியல் கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தான், தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் கலந்துகொள்ளும் விருந்தினர்களுக்கு தமிழகத்தின் பெருமையை நிலைநாட்டும் வகையில் பாரம்பரிய உடைகள் முதல் உணவுகள் வரை அவர்களுக்கு பரிசாக அளிக்கப்பட்டது.
அதில், பத்தமடை பாய், தோடர்களின் சால்வை, காஞ்சிபுரம் கைத்தறி பட்டுப்புடவை, ஊட்டி வர்க்கி, கன்னியாகுமரி கிராம்பு, கோவில்பட்டி கடலை மிட்டாய், ஈரோடு மஞ்சள், கொடைக்கானல் பூண்டு ஆகிய வழங்கப்பட்டன. அதுமட்டுமின்றி தமிழ்நாட்டின் சிறப்பு வாய்ந்த பொருட்கள் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த அழகிய பெட்டியில் அடுக்கப்பட்டு விருந்தினர்களுக்கு பரிசாக அளிக்கப்பட்டுள்ளது.