“அற்புதமான முடிவு” - தகாத உறவு தீர்ப்புக்கு வழக்கறிஞர்கள் வரவேற்பு

“அற்புதமான முடிவு” - தகாத உறவு தீர்ப்புக்கு வழக்கறிஞர்கள் வரவேற்பு
“அற்புதமான முடிவு” - தகாத உறவு தீர்ப்புக்கு வழக்கறிஞர்கள் வரவேற்பு

தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு மட்டும் தண்டனை வழங்கும் 497 சட்டப்பிரிவு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது எனக் கூறி அதனை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

சட்டப்பிரிவு 497 - ஒரு ஆண் , மற்றொரு திருமணமான பெண்ணுடன் , அந்தப் பெண்ணின் கணவர் சம்மந்தமின்றி உறவு வைத்துக் கொள்வதை கிரிமினல் குற்றம் எனக் கூறுகிறது. அந்தப் பெண்ணின் கணவர் புகார் அளிக்கும் போது தகாத உறவில் ஈடுபட்ட ஆணுக்கு 5 ஆண்டுகள் தண்டனை வழங்கப்படும். 

இந்த விவகாரத்தில் ஆணுக்கு மட்டும் தண்டனை வழங்கப்படுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த விவகாரத்தில் பெண்ணுக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் அல்லது சட்டப்பிரிவையே நீக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கேட்கப்பட்டிருந்தது. கணவரின் சம்மந்தமின்றி மனைவி உறவு கொள்வது என்பது, அந்தக் கணவருக்கு பெண் அடிமையா என்ற கேள்வியை எழுப்புவதாக பல்வேறு வாதங்கள் முன் வைக்கப்பட்டன. 

இந்தநிலையில் தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றுள்ள 5 நீதிபதிகளும் இந்த வழக்கில் ஒருமனதாக தீர்ப்பளித்துள்ளனர். பெண்களின் சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள், கணவர் என்பவர் பெண்ணுக்கு எஜமானர் கிடையாது என்றும் தெரிவித்தனர். பெண்ணுக்கு எதிரான பாகுபாடுகள் அனைத்தும் அரசமைப்பு சட்டத்திற்கு விரோதமானது எனத் தெரிவித்த நீதிபதிகள் சட்டப்பிரிவு 497 ஒரு தலைபட்சமான சட்டம் என்று கூறினர். அரசமைப்பு சட்டம் அனைவருக்கும் சமமானது எனத் தெரிவித்து சட்டப்பிரிவு 497ஐ ரத்து செய்வதாக அறிவித்தனர். 

எனவே தகாத உறவு என்பது கிரிமினல் குற்றமில்லை ஆனால், இதனை விவாகரத்து கோருவதற்கான காரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஒருவேளை தகாத உறவால் ஒருவர் தற்கொலை செய்து கொண்டால், அதனை சட்டப்பிரிவு 306 பிரிவின் படி தற்கொலை எனக் கருதி கிரிமினல் குற்றமாக கொள்ளலாம். தீர்ப்பு வழங்கிய அமர்வில் பங்கேற்ற ஒரே பெண் நீதிபதியான இந்து மல்கோத்ரா சட்டப்பிரிவு 497 இனி வரும் காலங்களிலும் தொடர நியாயமான காரணமில்லை எனக் கூறினார்.

அடல்டெரி (Adultery) தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ள மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், “பழமையான ஒரு சட்டத்தை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நீக்கியுள்ளது” என்றார். “பெண்களை ஆண்களின் சொத்தாக, போக பொருளாக கருத வைக்கும் பழமையான சட்டப்பிரிவு 497-ஐ நீக்கியுள்ளது வரவேற்கதக்கது. பிறர் மனைவியுடன் பாலுறவு கொள்வது குற்றமல்ல; வேண்டுமென்றால் விவாகரத்து செய்து கொள்ளலாம்” என்கிறார் பிரஷாந்த் பூஷன்.

அதேபோல், காங்கிரஸ் எம்.பியும், அக்கட்சியின் பெண்கள் பிரிவு தலைவருமான சுஷ்மிதா தேவும் இந்தத் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். “தகாத உறவை (adultery) குற்றமற்றதாக அறிவித்த இந்த முடிவு சிறப்பானது. தகாத உறவில் ஈடுபடும் தனது கணவருக்கு எதிராக புகார் அளிக்க பெண்ணுக்கு உரிமை இல்லை என்கிறது இச்சட்டம். மேலும் பெண் கணவருக்கு எதிராக வழக்குப் போட முடியாது என்பதும் சமநிலையற்ற பாகுபாடு. பெண்ணின் தனித்தன்மைக்கு இது எதிரானது” என்று குறிப்பிட்டுள்ளார். 

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்த தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா, இந்தச் சட்டம் நீண்ட நாட்களுக்கு முன்பே நீக்கப்பட்டிருக்க வேண்டும் என்றார். மேலும், “இந்தச் சட்டம் பிரிட்டிஷ் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. பிரிட்டிஷ் அதை நீண்ட காலமாகிவிட்டுவிட்டது. அதனை நாம் இன்னும் வைத்து கொண்டிருக்கிறோம்” என்கிறார் ரேகா சர்மா. 

“பெண்களின் மீது ஆணாதிக்கக் கட்டுப்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. 158 ஆண்டுகால பழமையான சட்டத்தை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது வரவேற்கதக்கது” என்கிறார் சமூக ஆர்வலர் ரஞ்சனா குமாரி.

என்ன சொல்கிறது 497 சட்டப்பிரிவு:-

“பிறர் மனைவி உடன் அவரது சம்மதம் இல்லாமல் ஓர் ஆண் பாலுறுவு கொள்வது குற்றம். இது பாலியல் வன்கொடுமை குற்றம் இல்லை. இருப்பினும், அது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். புகார் அளிக்கப்படும் நிலையில், பிறர் மனைவியுடன் பாலுறவு வைத்துக் கொண்ட ஆண் குற்றவாளியாக கருதப்பட்டு அவருக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அளிக்கப்படும். இல்லையென்றால் இரண்டும் அளிக்கப்படும். இதில், பாலுறவு வைத்துக் கொண்ட ஆண் குற்றவாளியாக கருதப்படும் நிலையில், பெண் குற்றவாளி அல்லது அவர் குற்றத்திற்கு துணை போனவர் மட்டுமே”

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com