”சுதந்திர இந்தியாவின் கணக்கை கேட்பேன்” அரசியலில் நுழையும் Ex. IAS.. யார் இந்த திவ்யா மிட்டல்?
இந்தியாவிலேயே அதிக சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில், அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அரசியல் களம் மெல்ல சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், கடந்த மாதம் தனது ஐ.ஏ.எஸ் பதவியை ராஜினாமா செய்த முன்னாள் மாவட்ட ஆட்சிய திவ்யா மிட்டல் (Divya Mittal) தான் அரசியலில் களமிறங்கப்போவதாக அறிவித்திருப்பது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்தச் சூழலில், திவ்யா மெட்டல் யார்? அவர் கடந்து வந்த பாதை என்ன? என்பது குறித்துப் பார்க்கலாம்.
ஹரியாணா மாநிலம் ரோவாரியைச் சேர்ந்த திவ்யா மெட்டல் 1983 நவம்பர் 23ல் பிறந்தவர். 2013-ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான இவர், ஐஐடி டெல்லி மற்றும் ஐஐஎம் பெங்களூரு ஆகிய புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் பயின்றார். படிப்பை முடித்த பிறகு, லண்டனில் நிதிச் சந்தையில் அதிக சம்பளத்தில் வர்த்தகராகப் பணியாற்றினார். வெளிநாட்டில் வசதியான வாழ்க்கை அமைந்தாலும், தனது தாய்நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தியா திரும்பினார். ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, 2013 செப்டம்பர் 2 அன்று ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார். மீரட், கோண்டா, கான்பூர் நகர், பரேலி, சந்த் கபீர் நகர், மிர்சாபூர் மற்றும் தியோரியா ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார் திவ்யா.
இறுதியாக லக்னோவில் வருவாய்த் துறையின் சிறப்புச் செயலாளராகப் திவ்யா பொறுப்பு வகித்தார். இவரது பணிக்காலத்தில் மிர்சாபூர் மாவட்ட ஆட்சியராக இருந்த காலம் மிக முக்கியமானது. குடிநீர் வசதி இல்லாத 'லஹுரியா தா' (Lahuria Dah) என்ற மலைக்கிராமத்திற்கு மாதக்கணக்கில் போராடி குழாய் மூலம் குடிநீர் திட்டத்தைக் கொண்டு வந்தார். இவ்வாறு, 13 ஆண்டுகள் அரசு நிர்வாகத்தில் பணியாற்றிய அவர், கடந்த ஆகஸ்ட் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். 13 ஆண்டுகால ஐ.ஏ.எஸ். பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த திவ்யா மிட்டல், தனது முடிவு திடீரென எடுக்கப்பட்டதல்ல என்றும், ஐ.ஏ.எஸ். பணி தனது வாழ்க்கையின் ஒரு அத்தியாயம் மட்டுமே என்றும் தெரிவித்திருந்தார்.
இந்தச்சூழலில் தான், அவரது ராஜினாமா கடந்த செப்டம்பர் 15-ம் தேதி ஏற்கப்பட்டது. 2இந்த நிலையில் தான், தற்போது அவர் வெளியிட்டிருக்கும் சுமார் 9 நிமிட வீடியோவில், அரசியலுக்குள் வரப்போவதாக திவ்யா மிட்டல் அறிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் பேசுகையில், உத்தரப் பிரதேசம்தான் தனது அரசியல் பயணத்தின் தொடக்கமாக இருக்கும் என்றும், எந்தவொரு அரசியல் கட்சியின் கொடியின் கீழும் நிற்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், சாமானிய மக்களின் குரலாக மாற விரும்புகிறேன் எனவும் நம்நாட்டின் 80 ஆண்டுகால சுதந்திரத்துக்கான கணக்கை கேட்க விரும்புகிறேன் எனவும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். மேலும், தற்போதைய யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு குறித்தும் விமர்சனங்களை முன்வைத்திருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

