எலான் மஸ்க்கின் ’ஸ்டார்லிங்க்’ இணைய சேவை.. இந்தியாவுக்கு விலை நிர்ணயம்! முதலில் இவ்வளவு செலுத்தணும்!
உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க்கின் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் மூலம் உலகில் பல நாடுகளுக்கு இணையச் சேவைகளை வழங்கி வருகிறது. செயற்கைக்கோள் வழியாக இணைய சேவை அளிக்கப்படுவதால், இந்த இணைய சேவை நகரம், கிராமம் என பாகுபாடு இன்றி அனைத்து பகுதிகளுக்கும் ஒரே சீரான வேகத்தில் கிடைக்கும். இதற்காக, இந்தியாவிலும் சேவையாற்ற விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்திருந்தது.
இந்த நிலையில், எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க், இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவைகளை வழங்குவதற்கான உரிமத்தை தொலைத்தொடர்பு துறையிடம் இருந்து பெற்றுள்ளது. இந்திய தொலைத்தொடர்பு துறை வட்டாரங்கள் இதை உறுதிப்படுத்தின. இது இந்தியாவில் வணிக நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு ஒரு முக்கிய மைல்கல்லாகும்.
யூடெல்சாட் ஒன்வெப் மற்றும் ஜியோ சாட்டிலைட் கம்யூனிகேஷன்ஸ் ஆகியவற்றுக்குப் பிறகு, இச்சேவையை வழங்க தொலைத்தொடர்பு துறையிடம் இருந்து உரிமம் பெற்ற மூன்றாவது நிறுவனம் ஸ்டார்லிங்க் ஆகும்.
இதற்கிடையே, ஸ்டார்லிங்க் நிறுவனம், இந்தியாவில் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தனது சேவைகளைத் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்டார்லிங்க் சேவையைப் பெற விரும்பும் பயனர்கள் முதலில் அதன் கருவியை ரூ. 33 ஆயிரத்திற்கு வாங்க வேண்டும் என்றும், மாதந்தோறும் ரூ.3 ஆயிரத்திற்கு அன்லிமிடெட்டடு இணையச் சேவையைப் பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஸ்டார்லிங்க் நிறுவனம் தனது அறிமுக திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு டிஷ் வாங்கும் வாடிக்கையாளருக்கும் ஒரு மாத இலவச சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது. ஸ்டார்லிங்க், இந்திய சந்தையில் நுழைவது நாட்டின் தொலைத்தொடர்புத் துறையில் போட்டியை தீவிரப்படுத்தக்கூடும் என்றும், கிராமப்புறங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொலைதூர இடங்களில் உள்ள வணிகங்களுக்கு முக்கியமான இணைப்பு தீர்வுகளை வழங்கக்கூடும் என்றும் தொழில் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.