நேர்மையான தேர்தல்? | தேர்தல் விதிமுறைகளை திருத்திய மத்திய அரசு.. என்ன நடக்கிறது தேர்தல் ஆணையத்தில்?
நீதிமன்றத்தின் உத்தரவு
டிசம்பர் 9-ஆம் தேதி, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு ஒரு முக்கிய உத்தரவை வழங்கியது. அந்த உத்தரவுப்படி, சமீபத்தில் ஹரியானா சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற போது வாக்குப்பதிவு மையத்தின் வீடியோ காட்சிகளை முகமது பிராச்சா என்ற வழக்கறிஞருக்கு வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது. சிசிடிவி காட்சிகள் மற்றும் பாதுகாப்பு கேமரா காட்சிகள் மற்றும் அந்த வாக்கு பதிவு மையத்தில் நடைபெற்ற காணொளி பதிவு ஆகிய அனைத்து நகலும் மனுதாரருக்கு அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போதே தேர்தல் ஆணையம் இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
ஆனாலும், வேட்பாளராக இருந்தால் கட்டணமின்றி அவருக்கு காணொளி விவரங்கள் அளிக்கப்பட வேண்டும் எனவும் மனுதாரர் வேட்பாளர் இல்லை என்பதால் அவரிடம் கட்டணம் வசூலிக்கலாம் என்பது மட்டுமே ஒரே மாற்றம் என உயர்நீதிமன்றம் தெரிவித்தது. ஆகவே அந்த வாக்குச்சாவடியின் காணொளி பதிவுகளை மனுதாரர் முகமது பிராச்சாவுக்கு வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
ஜனநாயகத்துக்கு எதிரான செயல்
இத்தகைய சூழலில் மத்திய சட்ட அமைச்சகம் சர்ச்சைக்குரிய உத்தரவை பிறப்பித்தது. டிசம்பர் 20ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையில் தேர்தல் விதிமுறை 93 திருத்தப்பட்டது. இந்த விதியின் உட்பிரிவு 2 (A) திருத்தப்பட்டதால், தேர்தல் தொடர்பான ஆவணங்கள் மற்றும் பிற ஆதாரங்களை பொதுமக்களுக்கு அளிக்க வேண்டும் என்கிற நடைமுறையில் மாற்றம் ஏற்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே முகமது பிராச்சா போன்ற மனுதாரர்களுக்கு தேர்தல் ஆணையம் அனைத்து ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை பகிர வேண்டும் என்கிற கட்டாயம் இனி கிடையாது என்கிற சூழல் உருவாகியுள்ளது.
ஏற்கனவே, தேர்தல் நடத்தப்படும் முறை குறித்து பல்வேறு புகார்கள் தொடர்ந்து வரும் நிலையில், இந்த சட்டத் திருத்தம் புதிய சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. இரண்டு பிரிவுகளாக உள்ள 17C ஆவணங்களை ஆறு வாரங்களுக்குள் வழங்க பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், மத்திய அரசு நீதிமன்ற உத்தரவை தடுக்கும் வகையில் இத்தகைய அரசாணை பிறப்பித்துள்ளது என்பதே எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாகும். இது தேர்தல் ஆணையத்தின் வெளிப்படைத் தன்மையை பாதிக்கும் எனவும் ஜனநாயகத்துக்கு எதிரான செயல் எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது பதிவு மூலம், "நேர்மையான, நியாயமான" தேர்தல் நடைமுறையை மத்திய அரசின் உத்தரவு கேள்விக்குறியாகி உள்ளது என கண்டனம் தெரிவித்துள்ளார். ஹரியானா சட்டமன்ற தேர்தல் மட்டுமல்லாமல், மகாராஷ்டிரா மாநிலத்தில் "தேர்தல் புனித தன்மையை கெடுத்து பெற்ற பொய்யான வெற்றி தீவிரமான எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளதால் அடைந்துள்ள பதற்றத்தின்" எதிரொலியே இந்த உத்தரவு என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.