முட்டை, சிக்கன் விலை 30% உயருமா? தொழில்துறையினர் எச்சரிக்கை.. டிசம்பரில் திணறப்போகும் பட்ஜெட்!!
அசைவ உணவுகளின் விலை இனி ராக்கெட் வேகத்தில் உயரப்போவதாக கூறப்படுகிறது. டிசம்பர் மாதம் முட்டை, சிக்கன் விலை அதிகரிக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, விலைவாசி உயர்வால் திணறிக்கொண்டிருக்கும் மக்களுக்கு, இப்போது அடுத்த ஷாக் காத்திருக்கிறது. இந்தியாவில் முட்டை மற்றும் சிக்கன் விலை வரும் டிசம்பர் மாதத்திற்குள் 25 முதல் 30 சதவீதம் வரை உயரக்கூடும் என கோழிப்பண்ணைத் தொழில்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இதுதொடர்பாக இந்தியாவின் மிகப்பெரிய கோழிப்பண்ணை நிறுவனத்தின் பொது மேலாளர் கே.ஜி. ஆனந்த் ஏராளமான தகவல்களை பகிர்ந்துள்ளா். தற்போது மொத்த விற்பனைச் சந்தையில் ஒரு முட்டையின் விலை 6 முதல் 7 ரூபாய் வரை இருக்கிறது. இது டிசம்பர் மாதத்திற்குள் 7 முதல் 8 ரூபாய் வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், தோல் நீக்கப்பட்ட ஒரு கிலோ சிக்கனின் மொத்த விலை 225 முதல் 250 ரூபாய் வரை இருக்கும் நிலையில், அது 260 முதல் 275 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது.
இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம் கோழிகளுக்கான தீவனச் செலவு. கடந்த ஆண்டு ஒரு கிலோ மக்காச்சோளம் 18 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு மாதத்திற்கு முன்பு 26 ரூபாயாக இருந்த அதன் விலை, தற்போது 34 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு தொடர்ந்தால், டிசம்பர் மாதத்திற்குள் ஒரு கிலோ மக்காச்சோளம் 40 ரூபாயை எட்டும் எனத் தொழில்துறையினர் கணித்துள்ளனர்.
மக்காச்சோளம்தான் இப்படி என்றால், கோழித் தீவனத்தில் பயன்படுத்தப்படும் உடைந்த அரிசியின் விலையும் அதிர்ச்சி கொடுக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒரு கிலோ உடைந்த அரிசி 15 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், தற்போது 32 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. ஓராண்டில் இதன் விலை இரண்டு மடங்குக்கும் அதிகமாக அதிகரித்திருக்கிறது. இதனால் கோழித் தீவனம் தயாரிப்பதற்கான செலவு பண்ணையாளர்களுக்குப் பெரும் சுமையாக மாறியிருக்கிறது.
தீவனத்திற்காக அதிகம் செலவு செய்ய வேண்டிய நிலையில், அதற்கேற்ப முட்டை மற்றும் சிக்கன் விலையை உடனடியாக உயர்த்த முடியாததால் கோழிப் பண்ணையாளர்களின் லாபமும் குறைகிறது.
இதனால், சில பண்ணையாளர்கள் கோழிகளை வழக்கமான வயதைவிடக் குறைவான வயதிலேயே விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் கோழி உற்பத்தி 20 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறையக்கூடும் எனத் தொழில்துறையினர் மதிப்பிடுகின்றனர். இதன் தாக்கம் கடைசியில் வந்து சேரப்போவது நுகர்வோரின் பாக்கெட்டில்தான்.

