டெல்லி குண்டுவெடிப்பு | அல்ஃபலா பல்கலை உள்ளிட்ட 25 இடங்களில் ED சோதனை!
அல்-ஃபலா பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நபர்களுடன் தொடர்புடைய டெல்லி மற்றும் ஃபரிதாபாத்தில் உள்ள 25 இடங்களில் அமலாக்க இயக்குநரகம் (ED)இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறது.
நவம்பர் 10ஆம் தேதி மாலை 6.52 மணியளவில் செங்கோட்டை சிக்னல் அருகே ஹரியானா நம்பர் பிளேட்டைக் கொண்ட காரிலிருந்து நிகழ்ந்த குண்டுவெடிப்பு இந்தியாவையே அதிர்ச்சியடையச் செய்தது. அதற்கு முன்பாக, ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் அல்-ஃபலா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த மருத்துவர் முசம்மில் ஷகீலின் வாடகை வளாகத்தில் இருந்து சுமார் 2,900 கிலோ ஐஇடி தயாரிக்கும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், அதில் முதல் முறையாக இந்த குண்டுவெடிப்பை, தற்கொலை படைத் தாக்குதல் என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய காஷ்மீரைச் சேர்ந்த அமீர் ரஷித் அலி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில்தான் செங்கோட்டை குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்திய டாக்டர் உமர் உன் நபி மற்றும் ஜெய்ஷ்-இ-முகமதுவுடன் தொடர்புடைய ஃபரிதாபாத் பகுதியில் குற்றம்சாட்டப்பட்ட மற்றவர்கள் பணியாற்றிய அல்-ஃபலா பல்கலைக்கழகம் சம்பந்தப்பட்ட நிதி முறைகேடுகள் தொடர்பாக அமலாக்கத் துறை PMLA வழக்கைப் பதிவு செய்துள்ளது. அந்த வகையில், அல்-ஃபலா பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நபர்களுடன் தொடர்புடைய டெல்லி மற்றும் ஃபரிதாபாத்தில் உள்ள 25 இடங்களில் அமலாக்க இயக்குநரகம் (ED)இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறது.
பல்கலைக்கழகத் தலைவர் ஜாவேத் அகமது சித்திக்கையும் அவரது இல்லத்தில் அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. அதிகாலை 5 மணியளவில் தொடங்கிய இந்த சோதனைகள், தற்போது டெல்லியில் உள்ள பல்கலைக்கழக தலைமையகத்திலும், நிறுவனத்தின் அறங்காவலர்களின் வளாகத்திலும் நடந்து வருகின்றன. ஆதாரங்களின்படி, பல்கலைக்கழக அறங்காவலர்களிடமும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஜாவேத் அகமது சித்திக் 1992ஆம் ஆண்டு அல்-ஃபலா முதலீட்டு நிறுவனத்தின் இயக்குநரானார், பின்னர் அல்-ஃபலா அறக்கட்டளையை நிறுவினார்.
காலப்போக்கில் அது வணிகம் கல்வி, மென்பொருள், நிதி சேவைகள் மற்றும் எரிசக்தித் துறையாக விரிவடைந்தது. ஹலால் முதலீடுகள் என்ற பெயரில் தனிநபர்களை ஏமாற்றியதாகக் கூறி, டெல்லி காவல்துறை 2000ஆம் ஆண்டு அவர் மீது மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளது. இதற்கிடையே, மத்தியப் பிரதேசத்தின் மோவ் நகரில், கிட்டத்தட்ட 25 ஆண்டுகால சுமார் 40 லட்சம் ரூபாய் முதலீட்டு மோசடி செய்ததாகக் கூறப்படும் மூன்று வழக்குகள் தொடர்பாக ஜாவேத் அகமது சித்திக்கின் சகோதரர் ஹமூத் அகமது சித்திக் கைது செய்யப்பட்டுள்ளார்.

