பினராயி விஜயன் இல்லத்தில் சோதனை.. அமலாக்கத்துறையின் கார் உடைப்பு.. தொண்டர்கள் ஆவேசம்!
கேரள சட்டப்பேரவைத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்திருக்கும் நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி 102 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியின், விடி சதீசன் அம்மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். அதேசமயம், தொடர்ச்சியான 10 ஆண்டு ஆட்சிக்குப் பிறகு, சிபிஎம் தலைமையிலான இடது முன்னணி 35 இடங்களில் மட்டுமே வெற்றியைப் பெற்று தோல்வியடைந்திருக்கிறது.
இந்தசூழலில் தான், திருவனந்தபுரத்தில் உள்ள கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் இல்லம் உட்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2017 மற்றும் 2020 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் கொச்சின் மினரல்ஸ் மற்றும் ரூட்டைல் லிமிடெட் நிறுவனம், பினராயி விஜயனின் மகள் வீணாவுக்கு சொந்தமான எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக ஒரு கோடியே 72 லட்சம் ரூபாய் பணம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. தொடர்ந்து, 2025 ஏப்ரலில், டி. வீணா மீது நிறுவனங்கள் சட்டம், 2013-இன் பிரிவு 447இன் கீழ் நிறுவன மோசடி வழக்குத் தொடர மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.
இந்தநிலையில் தான், கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற ஒருசில நாட்களிலேயே, பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை இன்று சோதனையில் ஈடுபட்டிருக்கிறது. எனினும், அமலாக்கத் துறையின் (ED) நடவடிக்கையை, அரசியல் உள்நோக்கம் கொண்ட ஒரு கொடூரமான தாக்குதல் என கூறிவரும், கேரள சிபிஎம் கட்சியின் தொண்டர்கள் திருவனந்தபுரத்தில், இச்சோதனையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, பினராயி விஜயனின் இல்லம் முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் மீது போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம் தொண்டர்கள், காலணிகள் மற்றும் பாட்டில்கள் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தசூழலில் தான், அமலாக்கத்துறையினர் சென்ற வாகனத்தின் மீது அக்கட்சியின் தொண்டர்கள் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். வாகனத்தின் முன்பக்க கண்ணாடியை சிபிஎம் தொண்டர்கள் உடைப்பது போன்ற காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

