கேரளா | Ex முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
கேரள முன்னாள் முதலமைச்சரும் சி.பி.ஐ(எம்) மூத்த தலைவருமான பினராயி விஜயன் இல்லம் உட்பட கேரளா முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை(ED) அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வழக்கின் பின்னணி ; கனிம நிறுவனமான ( Cochin Minerals and Rutile Limited) CMRL-இடமிருந்து பினராயி விஜயனின் மகள் வீணாவின் 'எக்ஸாலாஜிக்' நிறுவனம் (Exalogic Solutions Pvt Ltd,) 2017 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் பணம் கைமாறியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.
எவ்வித மென்பொருள் சேவைகளையும் வழங்காத போதிலும், Exalogic நிறுவனம் CMRL-இடமிருந்து ரூ. 1.72 கோடி பெற்றதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 2023-இல் இவ்வழக்கு தொடர்பான குற்றச்சாட்டுகள் முதன்முதலில் வெளிவந்தன. இந்த விவகாரத்தை மத்திய கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தீவிர மோசடி புலனாய்வு அலுவலகம் (SFIO) விசாரித்தபோது, வீணாவின் நிறுவனம் ஒட்டுமொத்தமாக ரூ.2.70 கோடி வரை சட்டவிரோதமாகப் பெற்றுள்ளதாகக் கண்டுபிடித்தது. இந்த CMRL நிறுவனத்தில் கேரள மாநில தொழில் வளர்ச்சிக் கழகம் (KSIDC) 13.4 சதவீதப் பங்குகளைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் இந்த வழக்கில் நேரடியாக குற்றவாளியாகச் சேர்க்கப்படாத நிலையில், அவரது மகள் டி. வீணா, Cochin Minerals and Rutile Limited (CMRL) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சசிதரன் கர்த்தா உள்ளிட்ட 25 பேருக்கு எதிராக SFIO (தீவிர மோசடி புலனாய்வு அலுவலகம்) 160 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
2025 ஏப்ரலில், டி. வீணா மீது நிறுவனங்கள் சட்டம், 2013-இன் பிரிவு 447இன் கீழ் நிறுவன மோசடி வழக்குத் தொடர மத்திய அரசு அனுமதி வழங்கியது. அமலாக்கத் துறையின் (ED) நடவடிக்கையை, அரசியல் உள்நோக்கம் கொண்ட ஒரு கொடூரமான தாக்குதல் என்று சிபிஎம் (CPI(M)) பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி கூறியுள்ளார்.

