தலைமையிலேயே மோதல்.. சர்ச்சையில் சிக்கிய தேர்தல் ஆணையம்.. என்ன நடந்தது?
செய்தியாளர் - ராஜ்குமார்.ர
கடந்த 10 மாதங்களில் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர், தேர்தல் ஆணையத்தின் சில முடிவுகள் தொடர்பாக குறைந்தது 14 முறை எழுத்துப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்ததாக ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பாக, வாக்காளர் பட்டியலில் புதிய பெயர்களை சேர்ப்பது, ஏற்கெனவே உள்ள பெயர்களை நீக்குவது, வாக்காளர் பட்டியல் தொடர்பான கணினி அமைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அவர்கள் கேள்விகளை எழுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் முக்கியமாகப் பேசப்படுவது, வாக்காளர் பட்டியல் தொடர்பான ‘ECINet’ என்ற கணினி அமைப்பு. இந்த அமைப்பின் மூலம் வாக்காளர் பட்டியல் தொடர்பான பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறித்து இரண்டு தேர்தல் ஆணையர்களும் சில கேள்விகளை எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்பத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள், வாக்காளர் பெயர்களை நீக்குவது தொடர்பான நடைமுறைகள் உள்ளிட்ட சில முடிவுகளிலும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால், தேர்தல் ஆணையத்தில் இருக்கும் மூன்று உறுப்பினர்களில் இரண்டு பேர் தொடர்ந்து சில முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பது தற்போது பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக, தேர்தல் ஆணையத்தின் முக்கிய முடிவுகள் மற்றும் அவை எவ்வாறு எடுக்கப்படுகின்றன என்பது தொடர்பாகவும் கேள்விகள் எழுந்துள்ளன. இந்நிலையில், இரண்டு தேர்தல் ஆணையர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படும் சில முடிவுகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டதாக வெளியாகியுள்ள தகவலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று விளக்கம் அளித்துள்ளது. தேர்தல் ஆணையத்தில் ஒரு முடிவு எடுக்கப்படுவதற்கு முன்பு, உறுப்பினர்கள் தங்களது கருத்துகள், கேள்விகள் மற்றும் மாற்றுக் கருத்துகளை தெரிவிப்பது வழக்கமான நடைமுறைதான் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், இதுபோன்ற கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இறுதியாக எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் சட்ட விதிமுறைகளைப் பின்பற்றியே எடுக்கப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அதாவது, ஒரு பக்கம் இரண்டு தேர்தல் ஆணையர்கள் பல்வேறு விஷயங்களில் எழுத்துப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மறுபக்கம், இதுபோன்ற கருத்து வேறுபாடுகள் தேர்தல் ஆணையத்தின் வழக்கமான ஆலோசனை நடைமுறையின் ஒரு பகுதியே என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
