மேற்கு வங்கம் | வெற்றி ஊர்வலங்களுக்கு அனுமதி இல்லை! தேர்தல் ஆணையம் அதிரடி!
மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கும் (முறைகேடுகள் தொடர்பாக ஒரு தொகுதியில் மறுதேர்தல் நடைபெற இருக்கிறது) ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டுகட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இங்கு பெரும்பான்மைக்கு 148 இடங்கள் என்கிற நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் 2026 முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, வெற்றி ஊர்வலங்கள் எதற்கும் அனுமதி இல்லை என்று தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், மேற்கு வங்கம் முழுவதும் எங்கும் வெற்றி ஊர்வலங்கள் நடத்த அனுமதிக்கப்படாது என்று சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சுப்ரதா குப்தா தெரிவித்தார். பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முகவர்களால் வாக்கு எண்ணும் மையங்களைச் சென்றடைய முடியவில்லை எனத் தேர்தல் ஆணையத்திற்குப் பல்வேறு புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
"தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வேட்பாளர்களின் வெற்றியை கொண்டாடும் வகையிலான எந்தவொரு பேரணியும் இன்று மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் அனுமதிக்கப்படாது" என்று குப்தா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புதுப்பிக்கப்பட்ட தகவல்களின்படி, பாரதிய ஜனதா கட்சி 173 சட்டமன்றத் தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது; அதேவேளையில், அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் (AITC) 87 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

