அரசு பங்களா விவகாரம் | காலி செய்யாத சந்திரசூட்.. பின்னணியில் இப்படி ஒரு சோக கதையா?
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்த சந்திரசூட், கடந்த ஆண்டு இறுதியில் ஓய்வு பெற்றார். எனினும் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டின் பதவிக்காலம் முடிந்தபின்னரும், அவர் அரசு பங்களாவை இன்னும் காலி செய்யாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்துக்கு உச்சநீதிமன்றம் எழுதிய கடிதத்தில், ’முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு வழங்கப்பட்ட அரசு பங்களாவின் அனுமதி மே 31ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இருப்பினும், பங்களாவைவிட்டு அவர் காலி செய்யவில்லை. ஆகையால், எண் 5, கிருஷ்ணா மேனன் மார்க் பங்களாவில் இருந்து சந்திரசூட்டை வெளியேற வைத்து, பங்களாவை ஒப்படைக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக விளக்கமளித்த முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட், ”எனக்கு வழங்கப்பட்ட வாடகை பங்களாவில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணி முடிவடைந்ததும் அங்கு சென்று விடுவேன். தனிப்பட்ட சூழ்நிலைகளே இந்த தாமதத்திற்குக் காரணம். இன்னும் கொஞ்ச நாட்கள்தான். நான் இங்கு நீண்டநாட்கள் தங்குவதற்கு ஆர்வமில்லை. இதுதொடர்பாக அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்கு கடிதம் எழுதியதாகவும், ஆனால் அதற்கு எந்தப் பதிலும் இல்லை” எனத் தெரிவித்திருந்தார்.
பல தீர்ப்புகளால் ஒருகாலத்தில், அனைத்து ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாக இடம்பிடித்த சந்திரசூட், இந்த விவகாரம் மூலம் மீண்டும் பேசுபொருளானார். இந்த நிலையில், இவ்விவகாரம் குறித்து NDTVக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார். அதில், “எனது மகள்களான பிரியங்கா மற்றும் மஹிக்கு எலும்பு தசைகளைப் பாதிக்கும் நெமலின் மயோபதி எனப்படும் அரிய மரபணு சிக்கல் உள்ளது. இந்த மருத்துவ சிக்கலுக்கு தற்போது உலகில் எங்கும் சிகிச்சை இல்லை. இருப்பினும் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் இதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இக்குறைபாடு, தசைச் சிதைவை ஏற்படுத்துகிறது. இது சுவாச அமைப்பைக் கடுமையாக பாதிக்கிறது.
கடுமையான ஸ்கோலியோசிஸ் விழுங்குதல் மற்றும் சுவாசம், பேச்சு தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. தவிர அனைத்து உறுப்புகளையும் பாதிக்கிறது. அவர்களின் சிகிச்சை மற்றும் பராமரிப்புக்காக ஒவ்வொரு நாளும் பல்வேறு பயிற்சிகள் தேவைப்படுகிறது. எனது மகள்கள் எங்களுடைய பராமரிப்பில் உள்ளனர்.
மேலும், அவர்களின் வசதிக்கு ஏற்ப 24 மணி நேரமும் கவனிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட வீடும் தேவைப்படுகிறது. குளியலறைகள் உட்பட இந்த வீடு, அவர்களின் நிலைமைக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் சோர்வுக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அது தசைகளை மேலும் மோசமாக்கிவிடும். அவர்கள் நல்ல உடல்நலத்தைப் பெற, பலதரப்பட்ட சுகாதார நிபுணர்கள் குழு தினசரி அல்லது வாராந்திர அடிப்படையில் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். அரசாங்கம் எனக்கு ஒரு தற்காலிக தங்குமிடத்தை வாடகைக்கு ஒதுக்கியுள்ளது.
ஆனால், அந்த வீடு இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் கிடக்கிறது. தற்போது, அது புதுப்பிக்கப்பட்டு வருகிறது. வீடு தயாரானவுடன் வெளியேறி விடுவேன். குழந்தைகள் சதுரங்க விளையாட்டில் மிகவும் திறமையானவர்கள். அவர்கள் டெல்லியில் உள்ள சமஸ்கிருத பள்ளியில் கல்வி பயின்று வந்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அதைத் தொடர முடியவில்லை. அவர்கள் தற்போது வீட்டிலேயே கல்வி கற்று வருகின்றனர். அவர்களின் அன்றாட நடவடிக்கைகளின் ஒவ்வொரு அம்சத்தையும் கல்பனா (மனைவி) கவனமாகக் கவனித்துக்கொள்கிறார். குழந்தைகளுடன் வீட்டில் ஓய்வு நேரத்தை செலவிட விரும்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.