”காலி பண்ண சொல்லுங்க..” அரசு பங்களாவில் தொடரும் சந்திரசூட்.. கடிதம் எழுதிய உச்ச நீதிமன்றம்!
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்த சந்திரசூட், கடந்த ஆண்டு இறுதியில் ஓய்வு பெற்றார். எனினும் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டின் பதவிக்காலம் முடிந்தபின்னரும், அவர் அரசு பங்களாவை இன்னும் காலி செய்யாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, உச்ச நீதிமன்றத்தில் தற்போது இந்திய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் உட்பட 33 நீதிபதிகள் உள்ளனர். இதில், உச்ச நீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகளுக்கு இன்னும் அரசு விடுதி ஒதுக்கப்படவில்லை. அவர்களில் மூன்று பேர் உச்ச நீதிமன்றத்தின் இடைநிலை அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து வரும் நிலையில், ஒருவர் அரசு விருந்தினர் மாளிகையில் வசித்து வருகிறார்.
எனவே, உச்ச நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லமான கிருஷ்ண மேனன் மார்க் பங்களா அவசரமாகத் தேவைப்படுகிறது. அரசாங்க விதிகளின்படி, பதவியில் இருக்கும் தலைமை நீதிபதி தனது பதவிக் காலத்தில் வகை VIII பங்களாவைப் பெற உரிமை உண்டு. ஓய்வு பெற்ற பிறகு, அவர் ஆறு மாதங்கள் வரை வாடகை இல்லாத வகை VII அரசு பங்களாவில் தங்கலாம். ஆனால் முன்னாள் நீதிபதி சந்திரசூட் ஓய்வுபெற்ற பிறகும் கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் தலைமை நீதிபதியாக அவருக்கு ஒதுக்கப்பட்ட வகை VIII பங்களாவில் தங்கியுள்ளார். உயர் பதவியில் இருந்த அவரது இரண்டு வாரிசுகளான முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் ஆகியோர் 5, கிருஷ்ண மேனன் மார்க் பங்களாவுக்குச் செல்லாமல், அவர்களின் முந்தைய தங்குமிடத்திலேயே தொடர்ந்ததாலும் இது சாத்தியமானது.
நீதிபதி சந்திரசூட் தொடரும் பட்சத்தில், தற்போது மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடிதம் எழுதியுள்ளது. ஜூலை முதல் தேதி அன்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்துக்கு உச்சநீதிமன்றம் எழுதிய கடிதத்தில், ’முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு வழங்கப்பட்ட அரசு பங்களாவின் அனுமதி மே 31ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இருப்பினும், பங்களாவைவிட்டு அவர் காலி செய்யவில்லை. ஆகையால், எண் 5, கிருஷ்ணா மேனன் மார்க் பங்களாவில் இருந்து சந்திரசூட்டை வெளியேற வைத்து, பங்களாவை ஒப்படைக்க வேண்டும்’ என்று அதில் கூறியுள்ளது.
இதுகுறித்து சந்திரசூட், ”எனக்கு வழங்கப்பட்ட வாடகை பங்களாவில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணி முடிவடைந்ததும் அங்கு சென்று விடுவேன். தனிப்பட்ட சூழ்நிலைகளே இந்த தாமதத்திற்குக் காரணம். இன்னும் கொஞ்ச நாட்கள்தான். நான் இங்கு நீண்டநாட்கள் தங்குவதற்கு ஆர்வமில்லை. ஏப்ரல் 28ஆம் தேதி, அப்போதைய தலைமை நீதிபதி கன்னாவுக்கு கடிதம் எழுதி, பொருத்தமான தங்குமிடத்தைத் தேடுவதால், ஜூன் 30ஆம் தேதி வரை பங்களாவில் தங்க அனுமதிக்குமாறு வலியுறுத்தினேன். ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.