புதுச்சேரி | மதுபோதையில் மருத்துவமனைக்கு வந்த ஆசாமி; தட்டிக்கேட்ட மருத்துவருக்கு கத்திகுத்து!
செய்தியாளர் - ரஹ்மான்
புதுச்சேரி பாவாணர் நகரைச் சேர்ந்தவர் வினோத்குமார் (40). இவரது மகன் மகேஷ், கடந்த 12-ந் தேதி மோட்டார் சைக்கிளில் சென்ற போது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். தொடர்ந்து அவர் தற்போது புதுச்சேரி அரசு மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தட்டிக் கேட்ட மருத்துவருக்கு கத்திக்குத்து!
இந்த நிலையில், தனது மகனைப் பார்ப்பதற்காக வினோத்குமார் இரவு அரசு மருத்துவமனைக்கு மது போதையில் சென்றுள்ளார். இதனைத் தட்டிக்கேட்ட அவரது மனைவி, மற்றும் சகோதரியை வினோத்குமார் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் அவரை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வினோத்குமார், கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து மருத்துவர் நவீன் (28) என்பவரின் கழுத்தில் திடீரென குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த மருத்துவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மது போதை ஆசாமியை மடக்கி பிடித்த போலீஸ்
இதனையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அந்த மதுபோதை ஆசாமி வினோத்குமாரை மடக்கிப் பிடித்து புறக்காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதனைத்தொடர்ந்து, அரசுப் பொது மருத்துவமனை மருத்துவர்கள் தங்களின் உயிருக்குப் பாதுகாப்பு அளிக்கக்கோரி 1 மணி நேரத்திற்கும் மேலாக பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவர்களின் திடீர் போராட்டத்தால், சிகிச்சை பெற வந்த நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் திரும்பிச் செல்லும் சூழல் ஏற்பட்டது.
போராட்டத்தில் இறங்கிய அரசு மருத்துவர்கள்
இந்தச் சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த, சட்டமன்ற உறுப்பினர் நேரு, சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு, ஆகியோர் மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மருத்துவர்களுக்கு உரியப் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டு அவர்கள் பணியைத் தொடங்கினர். பணியில் இருந்த அரசு மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.