பாக். பெண்ணுடன் தொடர்பு... ராணுவ ரகசியங்களை பகிர்ந்த இந்திய விஞ்ஞானி! 1,837 பக்க குற்றப்பத்திரிகை!

மகாராஷ்ட்ர மாநிலத்தை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் உளவுப் பிரிவு அதிகாரி ஒருவருடன் இந்தியாவின் ஏவுகணைகள், ட்ரோன் மற்றும் ரோபோடிஸ் போன்ற தொழில்நுட்பங்களின் தரவுகளை பகிர்ந்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிஆர்டிஓ அதிகாரி கைது
டிஆர்டிஓ அதிகாரி கைதுptweb

மகாராஷ்ட்ரா மாநில பயங்கரவாத எதிர்ப்பு படை, டிஆர்டிஓ விஞ்ஞானியாக உள்ள ப்ரதீப் குருல்கர் என்பவர், பாகிஸ்தான் பெண் அதிகாரி ஒருவரிடம் இந்தியாவின் ஏவுகணைகள், ட்ரோன், ரோபோடிக்ஸ் போன்ற தரவுகளை பகிர்ந்ததற்காக கடந்த மே 3 ஆம் தேதி கைது செய்து நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு இருந்தார்.

இவ்வழக்கில் ஜூன் 30 ஆம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில், “பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தில் - Defense Research and Development Organization (DRDO) இயக்குநராகப் பணியாற்றி வரும் 60 வயதாகும் குருல்கர், பாகிஸ்தானிய பெண்ணுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்துவதற்காக அவருடன் இந்த தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. குருல்கர் ஒரு முன்னணி வடிவமைப்பாளராகவும் குழுத் தலைவராகவும் பல இராணுவ பொறியியல் உபகரணங்கள் மற்றும் அமைப்புகளை உருவாக்கி வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தவர்.

இவருக்கு, இங்கிலாந்தில் வேலை செய்யும் சாஃப்ட்வேர் இன்ஜினியராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பாகிஸ்தானிய பெண் முகவரொருவர் குறுஞ்செய்திகள் மற்றும் வீடியோக்களை அனுப்பி வந்துள்ளார். தொடர்ந்து அப்பெண் குருல்கருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இங்கிலாந்து என சொன்ன அவரது ஐபி முகவரியை ஆய்வு செய்த போது அது பாகிஸ்தான் என காட்டியுள்ளது.

drdo
drdo

இப்பெண் ஜாரா தாஸ்குப்தா மற்றும் ஜூஹி அரோரா போன்ற பெயர்களில் போலிக் கணக்குகளை உருவாக்கியுள்ளார். மேலும் இதே பெயர்களில், +44 என்ற லண்டன் குறீட்டுடன் கூடிய இருவேறு செல்போன் எண்களை பயன்படுத்தி குறுஞ்செய்தி அனுப்பும் செயலிகளையும் உபயோகித்துள்ளார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பெண்ணுடன் விஞ்ஞானி குருல்கர், விண்கல ஏவுகணைப் பற்றியும் ரம்மோஸ் ஏவுகணைகள், ரஃபேல், ஆகாஷ் மற்றும் அஸ்ட்ரா ஏவுகணை அமைப்புகள் மற்றும் அக்னி-6 ஏவுகணை ஏவுகணை பற்றியும் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் ஆளில்லாத போர் விமானம், பாரத் குவாட்காப்டர், ஆளில்லாத போர் விமானத்தில் தற்போது மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்தும் தரவுகளையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இது குறித்து தீவிரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், “பாகிஸ்தான் பெண் முகவருடன் குருல்கருக்கு ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் தனது அன்றாட நிகழ்வுகளையும் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு சென்றுள்ளது. ஒரு கட்டத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டிஆர்டிஓ வளாகத்திற்குள் சிறுத்தை எப்படி வழிதவறி வந்தது என்பதையும் அவரிடம் தெரிவித்துள்ளார். இந்திய ராணுவத்தில் பணிபுரியும் ஒரு தனியார் விற்பனையாளரின் தலைமை நிர்வாக அதிகாரியின் பெயர் மற்றும் பிற விவரங்களையும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு குருல்கர் சென்றுள்ளார்.

drdo
drdo

பாகிஸ்தான் பெண் அதிகாரியிடம் குருல்கர் பகிர்ந்து கொண்ட தகவல்கள் அனைத்தும் சிறப்பு நீதிமன்றத்தில் சீல் வைக்கப்பட்ட உறைகளில் வைக்கப்பட்டு சமர்பிக்கப்பட்டுள்ளது. 1837 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கையில், செப்டம்பர் 2022 முதல் பிப்ரவரி 2023 ஆகிய காலக்கட்டத்திற்கு இடையில், அக்னி 6 லாஞ்சர் சோதனை வெற்றி பெற்றதா என பாகிஸ்தானிய பெண் அதிகாரி அவரிடம் கேட்டதற்கு, ‘லாஞ்சர் எனது வடிவமைப்பு.. இது மிகப்பெரிய வெற்றி’ என அவர் கூறியுள்ளார்.

“அக்னி 6 வேலை நடந்து கொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன். ஏதேனும் மாற்றங்கள் இருக்கிறதா” எனக் கேட்டதற்கு, “கொஞ்சம் பொறுமையாக இரு.. அதை செய்வேன்” என பதில் அளித்துள்ளார். மேலும் குருல்கருடன் மூன்று மின்னஞ்சல் முகவரிகளை பகிர்ந்து கொண்ட பாகிஸ்தான் பெண் முகவர் அவருடைய நம்பிக்கையை பெறுவதற்காக, மின்னஞ்சலின் கடவுச்சொல்லையும் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் சில செயலிகளையும் பதிவிறக்க சொல்லியுள்ளார்.

இந்த செயலிகளின் மூலம், செல்போன்கலில் மால்வேர் புகுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் குற்றப்பத்திரிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடயவியல் மூலம் டிஆர்டிஓ விஞ்ஞானிகள் அவரது செல்போனை ஆய்வு செய்து பார்த்த போது விஞ்ஞானியின் செல்போனில் மால்வேர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து தீவிரவாத தடுப்பு படைக்கு தகவல் அளித்துள்ளனர்.

பாகிஸ்தான் பெண் அளித்த மின்னஞ்சலை ஆய்வு செய்த போது அது பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட நயாடெல் (Nayatel) நிறுவனம் என்பதும் மின்னஞ்சல் ஐடிக்கான ஐபி முகவரி பாகிஸ்தான் தொலைத்தொடர்பு லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டிஆர்டிஓ அதிகாரி கைது
டிஆர்டிஓ அதிகாரி கைது

குருல்கரின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்ட டிஆர்டிஓ அதிகாரிகள் மார்ச் மாதத்தில் மகாராஷ்ட்ரா தீவிரவாத தடுப்பு படைக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். உளவு பார்த்தமை மற்றும் அண்டை நாட்டில் இருந்து தொடர்புகொண்டவர்களுடன் தவறான தொடர்பு கொண்டவர் போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்ட குருல்கர் தற்போது புனேவில் உள்ள ஏர்வாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com