உ.பி.| 2.89 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்.. 1.30 லட்சம் பேர் இடப்பெயர்வு!
உத்தரப்பிரதேசத்தில் எஸ்ஐஆர் பணிகள் நிறைவடைந்து, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், சுமார் 2 கோடியே 89 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
இந்தியத் தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர் எனப்படும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. பீகாரில் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு முதற்கட்டமாகத் தொடங்கப்பட்ட இப்பணி, 2ஆவது கட்டமாக, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகள், புதுச்சேரி மற்றும் சத்தீஸ்கர், கோவா, குஜராத், கேரளா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் கடந்த நவம்பர் மாதம் 4ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, வாக்களர்களின் வீடுகளுக்கே சென்று எஸ்.ஐ.ஆர் படிவங்கள் விநியோகிக்கப்பட்டு பெறப்பட்டன. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்களர் பட்டியல் திருத்தத்திற்குப் பிறகு, வாக்காளர் வரைவுப் பட்டியல் வெளி்யிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு, புதுச்சேரி, குஜராத், மேற்கு வங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்குப் பிறகு தற்போது மத்தியப் பிரதேசம், கேரளா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும், அந்தமான் மற்றும் நிகோபார் தீவு யூனியன் பிரதேசத்திலும் வாக்காளர் வரைவுப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
அதன்படி, உத்தரப் பிரதேசத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில், சுமார் 2 கோடியே 89 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இடம்பெயர்ந்த ஒரு கோடியே முப்பது லட்சம் பேர், முகவரியில் இல்லாத 79 லட்சம் பேர் மற்றும் உயிரிழந்த 46 லட்சம் பேரின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. கான்பூர் போன்ற பெருநகரங்களில் சுமார் 30 சதவீத வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. பெயர் விடுபட்டவர்கள் ஜனவரி 1 முதல் 30ஆம் தேதி வரை மீண்டும் விண்ணப்பிக்கக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 28ஆம் தேதியன்று வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

