கட்டுமானத்தில் நேரடி முதலீடு.. இந்திய வணிகத்தை 4 மடங்கு விஸ்தரிக்கும் ட்ரம்ப் நிறுவனம்!
இந்தியாவை இறந்த பொருளாதாரம் என குறிப்பிட்டு காட்டமாக விமர்சித்த அமெரிக்க அதிபர் டரம்ப், ஒரு தொழிலதிபராக வியாபாரியாக தனது எல்லைகளை விரிவுபடுத்தி வருகிறார். அந்த வகையில், ட்ரம்ப் நிறுவனத்தின் தனிப்பட்ட வர்த்தகம் இந்தியாவில் மட்டும் 3 மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது. அதனை பெருஞ்செய்தியாக பார்க்கலாம்.
தந்தையின் ரியல் எஸ்டேட் சாம்ராஜ்யத்தை அரை நூற்றாண்டுகளில் பல ஆயிரம் கோடிகளாக பெருக்கியவர் ட்ரம்ப். உலகளாவிய அளவில் ட்ரம்ப் நிறுவனங்களின் சொத்து மதிப்பு சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து 62 ஆயிரம் கோடி ரூபாய் வரை இருக்க வாய்ப்புள்ளதாக ஃபோர்ப்ஸ், ஃப்ளூம்பெர்க் போன்ற ஆய்வு நிறுவனங்கள் கூறுகின்றன. அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, அவரது நிறுவனம் இந்தியாவில் வணிகத்தை அதிரடியாக விரிவுபடுத்தி வருகிறது.
கடந்த 8 மாதங்களில் மட்டும், இந்திய கூட்டாளியான ட்ரிபெகா டெவலப்பர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, குருகிராம், புனே, ஹைதராபாத், மும்பை, நொய்டா மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் 6 புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த திட்டங்கள் மூலம், சுமார் 80 லட்சம் சதுர அடியில் புதிய கட்டுமானங்களை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வரை, இந்தியாவில் 7 திட்டங்களில் இருந்து சுமார் 175 கோடி ரூபாய் வருவாயை ட்ரம்ப் நிறுவனம் ஈட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2012ஆம் ஆண்டு புனேயில் 300 கோடி ரூபாய் மதிப்பில் ட்ரம்ப் டவரின் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு 2015ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது. கொல்கத்தாவில் 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பணிகள் அடுத்த ஆண்டு முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பையில் ரெசிடன்ஷியல் டவர் தொடங்கப்பட்டாலும் மனைகள் வாங்குவதில் சிக்கலால் திட்டம் தோல்வியை தழுவியது. மும்பையில் 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ட்ரம்ப் டவர் முடிக்கப்பட்ட நிலையில், குருகிராமில் 2018இல் தொடங்கப்பட்ட திட்டம் அடுத்த ஆண்டு முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, குருகிராமில் 2016ல் தொடங்கப்பட்ட திட்டப் பணிகளில் முன்னேற்றம் இல்லை என தெரிகிறது. 2012இல் இந்தியாவில் முதல் திட்டத்தை ஆரம்பித்த ட்ரம்ப் நிறுவனத்தின் வணிக பரப்பு, ஹைதராபாத், புனே உள்ளிட்ட இடங்களில் புதிய திட்டங்கள் முடிந்த பிறகு, சுமார் ஒரு கோடியே 10 லட்சம் சதுர அடியாக உயர உள்ளது.
இந்த புதிய திட்டங்களின் விற்பனை மதிப்பு மட்டும் 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என ட்ரிபெகா நிறுவனம் தெரிவித்துள்ளது. ட்ரம்ப் நிறுவனம், கட்டுமானப் பணிகளில் நேரடியாக முதலீடு செய்வதில்லை. மாறாக, தங்கள் பிராண்டின் பெயரை மட்டும் பயன்படுத்த அனுமதி அளித்து, அதற்கு கட்டணமாக, திட்டத்தின் மொத்த விற்பனையில் 3 முதல் 5 சதவீதம் வரை பங்கு பெற்றுக்கொள்கிறது. இது அவர்களுக்கு எந்தவிதமான நிதி இடரும் இல்லாமல் தொடர் வருவாயை உறுதி செய்கிறது.