தேனிலவு சென்ற மருத்துவ தம்பதி உயிரிழந்த பரிதாபம்; 1 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்!
சென்னை பூந்தமல்லியை அடுத்த சென்னீா்குப்பத்தை சோ்ந்தவா் திருஞானசெல்வம். இவரது மகள் விபூஷ்னியா. இவருக்கும், லோகேஸ்வரன் என்பவருக்கும் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது.
டாக்டர் தம்பதியான இவர்கள், தேனிலவுக்காக இந்தோனேசியா சென்றனா். இந்தோனேசியா கடலில் படகில் சென்ற அவர்கள் 'போட்டோ ஷூட்' நடத்தியபோது, கடல் அலை காரணமாக நிலை தடுமாறி விழுந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். டாக்டர் தம்பதியை தேனிலவு அழைத்து சென்ற சுற்றுலா நிறுவனத்தின் தவறான வழிகாட்டுதலால் தான் இந்த விபத்து நடந்ததாக கூறி டாக்டர் விபூஷ்னியாவின் தந்தை திருஞானசெல்வம் வக்கீல்கள் காசிராஜன், அஜித்குமார் ஆகியோர் மூலம் சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் சுற்றுலா நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், 'எனது மகள், மருமகன் உயிரிழந்த கடல் பகுதியில் ஏற்கனவே பல விபத்துகள் நடந்துள்ளன. சுற்றுலா நிறுவனம் இதை கருத்தில் கொள்ளாமல் அங்கு அழைத்து சென்றுள்ளது. சுற்றுலா நிறுவனத்தின் அஜாக்கிரதை மற்றும் தவறான வழிகாட்டுதலால் தான் இருவரும் உயிரிழக்க நேரிட்டுள்ளது. எனவே, சுற்றுலா நிறுவனம் உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்' என கூறியிருந்தார். இந்த மனு மீதான விசாரணையின்போது சுற்றுலா நிறுவனம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், 'சுற்றுலா நிறுவனத்தின் எச்சரிக்கையை பின்பற்ற தவறியதுதான் இந்த விபத்துக்கு காரணம் ஆகும். இந்த விபத்துக்கு சுற்றுலா நிறுவனம் பொறுப்பேற்க முடியாது. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது
இந்நிலையில், வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், நிறுவனத்தின் சேவை குறைபாட்டை உறுதி செய்து, இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதில், 'சேவை குறைபாட்டுக்காக ரூ.1½ கோடியும், மன உளைச்சலுக்காக ரூ.10 லட்சமும் என மொத்தம் ரூ.1 கோடியே 60 லட்சத்தை மனுதாரருக்கு சுற்றுலா நிறுவனம் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டது.