மணிப்பூர் விவகாரம்| அவையில் கர்ஜித்த கனிமொழி!
மணிப்பூர் மக்களின் கண்ணீரைத் துடைக்க இன்னும் யாருக்கும் மனம் வரவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அகற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டாலும் காட்சிகள் மாறவில்லை. மணிப்பூர் மாநிலத்தில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக, அதுகுறித்துப் பேச தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துவந்தனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 2 மணியளவில் அதற்கு நேரம் ஒதுக்கப்பட்டது. இந்தியா நிம்மதியாய் உறங்கிக்கொண்டிருந்தபோது, திமுக எம்பி கனிமொழி மணிப்பூர் மக்களுக்காக பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இன்று அதிகாலை 2 மணிக்கு அவர் பேசியதிலிருந்து, ”எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள், இந்த அவையில் மணிப்பூர் குறித்து பேச பலமுறை கோரிக்கை விடுத்திருக்கிறோம். ஆனால், இன்று அதற்கான நேரத்தை ஒதுக்கியிருக்கிறீர்கள். அதுவும் நள்ளிரவு 2 மணிக்கு. மணிப்பூர் மக்கள் மீதும், அங்கு நிலவும் பிரச்னைகள் மீதும் உங்களுக்கு இருக்கும் அக்கறையைத்தான் இது காட்டுகிறது. உங்களுக்கு மணிப்பூர் மேல் எந்த அக்கறையும் இல்லை. இதுவா அதற்கான நேரம்? இது மிகவும் மோசமானது. மணிப்பூரில் இதுவரை 260க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 67,000 மக்கள் புலம்பெயர்ந்திருக்கிறார்கள். 5,000 வீடுகள் சேதமடைந்திருக்கின்றன. தேவாலயங்கள், கோயில்கள் சூறையாடப்பட்டிருக்கின்றன. அங்குள்ள முகாம்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்திருக்கிறோம். அந்த முகாமில் இருந்த தாயார் குறித்து நான் பதிவு செய்ய விரும்புகிறேன். தினமும் தன் மகன் முகாமிற்கு வருகிறாரா என பார்த்தபடி அந்த தாய் இருப்பார். ஒருகட்டத்தில் அந்த தாய் நம்பிக்கையை இழந்துவிட்டார். தன் மகன் உயிரோடு இருக்கிறாரா அல்லது இறந்துவிட்டாரா என்பதையாவது சொல்லுங்கள் என கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டிருந்தார். இது ஒரு தாயின் அழுகுரல் மட்டும் அல்ல. ஆயிரக்கணக்கான தாய்மார்கள் தங்களுக்குள் கண்ணீர்க் கதைகளை சுமந்துகொண்டு, தொலைந்துபோன தங்கள் குழந்தைகள் திரும்பி வந்துவிட மாட்டார்களா என காத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை அறியமுடியவில்லை. உயிரோடாவது இருக்கிறார்கள் என்பதைக்கூட உறுதிப்படுத்த முடியவில்லை.
ஆனால், அந்த மாநிலத்தில் அமைதி திரும்ப எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஒருவர் வன்முறையில் ஈடுப்பட்டிருப்பது, வன்முறையை தூண்டிவிட்டிருப்பதும் மிக மோசமானது. போராட்டக்காரர்களின் கைகளுக்கு துப்பாக்கிகள் எப்படி கைமாறின. இதற்கெல்லாம் யார் பொறுப்பேற்கப் போகிறார்கள்? அங்கு கொல்லப்பட்ட உயிர்களுக்கு யார் பதில் சொல்லப் போகிறார்கள்? இரண்டு பெண்கள் வீதியில் நிர்வாணமாக்கப்பட்டனர். இந்த தேசத்திற்கான அவமானம் இது. இதற்கு யார் பதில் சொல்லப்போகிறார்கள். எதற்கும் பதில் கிடையாது.
உள்துறை அமைச்சர் அங்கு மீண்டும் எல்லாம் சரியாகிவிடும் என பேசினார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. அவர் இயல்பு நிலை திரும்பிவிட்டது என சொன்னபின்பும் வன்முறை வெறியாட்டங்கள்தான் தொடர்கின்றன. 103 பேர் காயம் அடைந்திருக்கிறார்கள். 16 பேர் படுகாயமடைந்திருக்கிறார்கள். இதுதான் நிலை என்றால், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி நீடிப்பதன் அர்த்தம் என்ன?
14,000 மாணவர்களால் மீண்டும் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. ஆனால், பட்ஜெட்டில் அந்த மாநிலத்திற்கு நிதியை குறைத்திருக்கிறீர்கள். இயல்பு நிலையும், அமைதியும் அங்கு நிலவ வேண்டும் என எங்கள் முதல்வர் என கூறியிருக்கிறார். அங்கு மக்களால் தேர்ந்தெடுக்க ஆட்சி நடைமுறைக்கு வர வேண்டும். மக்களை ஒன்றிணைக்கூடிய அரசு அங்கு வர வேண்டும். இந்த அரசைப்போல பிளவுவாத அரசியலை மேற்கொள்ளாத அரசாக இருக்க வேண்டும். வஃக்பு வாரிய மசோதாவில் பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசுகிறீர்களே, மணிப்பூர் பெண்களின் பாதுகாப்பு குறித்து யோசிக்கிறீர்களா? நிச்சயமாக இல்லை. இந்த மண்ணின் மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறீர்கள்” எனப் பேசினார்.