பணக்கார முதல்வர் | முதலிடத்தைப் பிடித்த டி.கே.சிவகுமார்.. 5 இடங்களுக்குள் நுழைந்த விஜய்!
இந்தியாவின் பணக்கார முதலமைச்சர் என்ற பெருமையை கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் பெற்றுள்ளார். அவர், இன்று கர்நாடக முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
2023ஆம் ஆண்டுமுதல் கர்நாடகாவின் முதல்வராக சித்தராமையா இருந்த நிலையில், காங்கிரஸ் தலைமை எடுத்த முடிவுகளுக்குப் பிறகு அந்தப் பதவியிலிருந்து விலகினார், சித்தராமையா. இதைத் தொடர்ந்து துணை முதல்வராக இருந்த டி.கே.சிவகுமார் இன்று முதல்வராகப் பதவியேற்றார். அவருடன் ஒரு துணை முதலமைச்சரும், 12 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிலையில், இந்தியாவின் பணக்கார முதலமைச்சர் என்ற பெருமையை கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் பெற்றுள்ளார். இவரது சொத்து மதிப்பு 1,413 கோடி ரூபாய் ஆகும். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு 931 கோடி ரூபாய் சொத்துகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் தனது சொத்து மதிப்பு 625 கோடி ரூபாய் என வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். பணக்கார முதல்வர்கள் பட்டியலில் விஜய் 3ஆம் இடத்தில் உள்ளார். அருணாச்சல பிரதேசத்தின் பாஜக முதல்வர் பெமா காண்டு 332 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுடன் 4ஆம் இடத்தை வகிக்கிறார். நாகாலாந்து முதல்வராக உள்ள நெய்பு ரியோ 46 கோடி ரூபாய் சொத்துகளுடன் 5ஆவது இடத்தில் உள்ளார். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி 28 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுடன் 6ஆவது இடத்தில்உள்ளார். தெலங்கானாவில் ரேவந்த் ரெட்டி, ஜார்க்கண்ட்டின் ஹேமந்த் சோரன் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

