கடுங்குளிரிலும் சரண கோஷத்துடன் சபரிமலையில் குவியும் பக்தர்கள் - நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்
செய்தியாளர்: ரமேஷ் கண்ணன்
பிரசித்தி பெற்ற சபரிமலையில் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்ட டிசம்பர் 30ம் தேதி முதலே பக்தர்கள் கூட்டம் படிப்படியாக அதிகரிக்கத் துவங்கியது. இதையடுத்து ஆங்கில புத்தாண்டு தினத்தில் மட்டும் பக்தர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்த நிலையில், அடுத்து வரும் நாட்களிலும் பக்தர்கள் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளது.
குறிப்பாக சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் முதல் நாள் வெள்ளிக்கிழமை இரவே பக்தர்கள் சபரிமலையில் குவியத் துவங்கினர். இந்நிலையில், இன்று அதிகாலை முதலே சபரிமலையில் பனிமூட்டத்தோடு கடுங்குளிர் நிலவுகிறது. நடுநடுங்க வைக்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
பம்பையில் இருந்து மலையேறும் ஏழு கிலோமீட்டர் மலைப்பாதை துவங்கி பெரிய நடைப்பந்தல், கொடிமரம், 18ம் படி, முற்றம், கருவறை, ப்ளை ஓவர் என எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் வெள்ளமாய் காட்சியளிக்கிறது. பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பிற்கு ஏற்ப சரண கோஷ முழக்கங்களும் சன்னிதானத்தை அதிர வைத்து வருகிறது.
சபரிமலையில் பக்தர்களின் நெரிசலற்ற, காத்திருப்பற்ற சுப தரிசனத்திற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஞாயிற்றுக் கிழமையான இன்று மேலும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே ஒரு பக்தர் கூட தரிசனம் செய்ய முடியவில்லை என்ற நிலை உருவாகக் கூடாது என்பதை உறுதி செய்யும் நடவடிக்கைகளில் போலீஸார் உள்ளிட்ட இதர அரசுத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.