தேவேந்திர ஃபட்னாவிஸ்
தேவேந்திர ஃபட்னாவிஸ்கோப்புப்படம்

RSS to மகாராஷ்ட்ராவின் அடுத்த முதல்வர்... யார் இந்த தேவேந்திர ஃபட்னாவிஸ்? சிறப்புத் தொகுப்பு!

மஹாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதாவின் மஹாயுதி கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், அம்மாநில முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ் இன்று பொறுப்பேற்க உள்ளார். யார் இந்த தேவேந்திர ஃபட்னாவிஸ்? சிறப்புத் தொகுப்பை பார்க்கலாம்.
Published on

நாட்டின் பணக்கார மாநிலம், உத்தரப்பிரதேசத்துக்கு அடுத்து நாடாளுமன்றத்துக்கு அதிகமான எம்பிக்களை அனுப்பும் பிராந்தியம், இந்தப் பின்னணியாலேயே பிரதமருக்கு அடுத்து இந்தியாவில் சக்தி வாய்ந்த பதவி என்று கருதப்படும் மஹாராஷ்டிரத்தின் முதல்வர் ஆகிறார் தேவேந்திர ஃபட்னாவிஸ்.

தேவேந்திர ஃபட்னாவிஸ்
தேவேந்திர ஃபட்னாவிஸ்முகநூல்

பாஜகவுக்கு இந்தத் தேர்தலில் கிடைத்துள்ள வரலாறு காணாத வெற்றி, மஹாராஷ்டிரத்தைத் தாண்டியும் தேசிய அளவில் கவனம் ஈர்க்கும் தலைவராக ஃப்டனவீஸை மாற்றியுள்ளது. மஹாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் பிறந்த தேவேந்திர பட்நாவிஸின் தந்தை கங்காதர ஃபட்னாவிஸ் அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்டவர்.

பாஜகவின் தாயான ஜனசங்கத்தின் உறுப்பினராக இருந்த அவர், தான் பங்கேற்கும் அரசியல் பொதுக்கூட்டங்களுக்கும், கட்சி நிகழ்ச்சிகளுக்கும் மகனையும் அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்படித்தான் தந்தையின் அடியொற்றி அரசியலில் கால் பதித்தார் தேவேந்திர ஃபட்னாவிஸ்.

தேவேந்திர ஃபட்னாவிஸ்
தேவேந்திர ஃபட்னாவிஸ்

நாக்பூர் சட்டக் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போது, பாஜகவின் மாணவர் அணி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஃபட்னாவிஸ் அடுத்தடுத்து கட்சியில் வேகமாக வளர அவருடைய செயல்பாடுகளோடு, அவருடைய தந்தையின் பின்னணியின் ஒரு காரணமாக அமைந்தது. ஆம். மஹாராஷ்டிரத்தின் செல்வாக்கு மிக்க மூத்த தலைவரான நிதின் கட்கரி உள்ளிட்ட பல தலைவர்களுக்கு அரசியல் குருவாகத் திகழ்ந்தவர் பட்னவீஸின் தந்தை.

தேவேந்திர ஃபட்னாவிஸ்
மகாராஷ்டிரா முதலமைச்சர் ஆகிறார் தேவேந்திர ஃபட்னாவிஸ்... சூடுபிடிக்கும் துணை முதல்வர் Race!

இளவயதிலேயே பல வாய்ப்புகள் ஃபட்னாவிஸைத் தேடிவந்தன. 1992இல், அதாவது ஃபட்னவிஸின் 22 வயதிலேயே நாக்பூர் மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வதில் ஃபட்னாவிஸ் கெட்டிக்காரர். அடுத்து, 27 வயதில் நாக்பூர் நகரின் இளம் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தேவேந்திர ஃபட்னாவிஸ்
தேவேந்திர ஃபட்னாவிஸ்

தொடர்ந்து, 1999 மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் நின்று சட்டமன்ற உறுப்பினரானவர், வெகு வேகமாகத் தன்னை வளர்த்துக்கொள்ள மஹாராஷ்டிர பாஜகவுக்குள் நடந்த உள் அரசியலும் ஒரு காரணமாக அமைந்தது. மஹாராஷ்டிரத்தின் சக்தி வாயந்த இளம் தலைவர்களில் ஒருவராக வளர்ந்துவந்த பிரமோத் மஹாஜன் கொல்லப்பட்ட பிறகு, பாஜக அங்கே இரு பிரிவுகளாக பிளந்தது.

தேவேந்திர ஃபட்னாவிஸ்
மகாராஷ்ட்ரா தேர்தல் முடிவுகள்: பாஜக வெற்றியின் பின்னணி என்ன? கோபண்ணா சொன்ன விளக்கம்!

பிராமண சமூகத்தை சேர்ந்த நிதின் கட்கரி, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கோபிநாத் முண்டே இரு தலைவர்களுமே மஹாராஷ்டிரத்தில் பாஜகவின் முகங்களாகப் பத்தாண்டுகளுக்கு முன்புவரை இருந்தனர். 2014இல் சாலை விபத்தில் முண்டே காலமானார்.

நிதின் கட்கரிக்கும் மோடி-ஷாவுக்கும் இடையிலான பனிப்போர் முண்டேவின் மறைவுக்குப் பிறகு, இன்னொரு தலைவருக்கான தேவையை மோடி- ஷாவுக்கு உணர்த்தியது. இந்த இடத்தில்தான் ஃபட்னாவிஸ் கவனம் ஈர்த்தார்.

கட்கரியைப் போன்றே பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர், ஆர். எஸ்.எஸ். பின்னணியில் வளர்ந்தவர் என்பதோடு, கட்கரிக்கு எதிரான முண்டே பிரிவோடு இணைந்து செயல்பட்டவர் என்பதால், ஃபட்னாவிஸை முன்னுக்கு நகர்த்தியது பாஜக தேசிய தலைமை.

2014 தேர்தலில் பாஜக கூட்டணி வென்றபோது மஹாராஷ்டிரத்தின் முதல்வராகப் பதவியேற்றார் ஃபட்னாவிஸ்.

ஃபட்னாவிஸ்
ஃபட்னாவிஸ்

சிவசேனையுடன் சிக்கலான கூட்டணி உறவு, மராத்தா சமூகத்தைச் சாராத முதல்வர் இப்படியான சவால்களையெல்லாம் தாண்டியும் ஐந்தாண்டு காலத்தை ஒரு முதல்வராக முழுமையாக கடந்தார் ஃபட்னாவிஸ். மஹாராஷ்டிரத்தில் ஒரு முதல்வர் முழு ஆட்சிக் காலத்தை இப்படிக் கடப்பதேகூட பெரும் சவால்தான். வசந்தராவ் நாயக்குக்கு அடுத்து, இப்படி ஐந்தாண்டுகள் ஆட்சியை முழுமையாக கடந்த வரலாறு ஃபட்னாவிஸுக்கு மட்டுமே உண்டு.

தேவேந்திர ஃபட்னாவிஸ்
பாஜகவின் வெற்றியைவிடப் பேசப்பட வேண்டியது உத்தவ் சேனையின் தோல்வி… ஏன்?

அடுத்து 2019ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை, சிவசேனாவுடன் இணைந்து எதிர்கொண்டு வெற்றி கண்டது பாஜக. ஆனால், “யார் முதல்வர்?” என்ற போட்டியில், கூட்டணி உடைந்தது. பாஜகவுடன் உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உதவியோடு ஆட்சியில் அமர்ந்தார் சிவசேனையின் அன்றைய தலைவரான உத்தவ் தாக்கரே.

மகாராஷ்ட்ரா தேர்தல்
மகாராஷ்ட்ரா தேர்தல்

சரியான தருணத்துக்குக் காத்திருந்த பாஜக கரோனா காலகட்டத்தில் சிவசேனைக்குள் உருவாகியிருந்த பூசலைத் தனதாக்கிக்கொண்டு, அக்கட்சியை உடைத்தது. அடுத்து, தேசியவாத காங்கிரஸ் உடைந்தது. இதன் ஊடாக நடந்த ஆட்சி மாற்றத்தில் பெரிய முடிவுக்கு சம்மதித்தார் ஃபட்னாவிஸ்.

ஆமாம், சட்டமன்றத்தில் 122 இடங்களை பாஜக வைத்திருந்த நிலையில், அதில் சரிபாதி இடங்களைக்கூட வைத்திராத சிவசேனையின் ஷிண்டே பிரிவிடம் முதல்வர் பதவியை அளித்துவிட்டு துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டார் ஃபட்னாவிஸ். பாஜகவுக்குள் இது பெரிய அளவில் ஃபட்னாவிஸின் புகழை உயர்த்தியது. ‘கட்சி நலனுக்காக எந்த முடிவுக்கும் தயாராக இருப்பார் ஃபட்னாவிஸ்’ எனும் பெயரைக் கொடுத்தது.

ஆனால், சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் இரண்டும் பிளவுண்டதே 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும் பின்னடைவைச் சந்திக்க காரணமாகவும் அமைந்தது. துவண்டுவிடவில்லை ஃபட்னாவிஸ். சட்டமன்ற தேர்தல் பணிகளுக்கான களத்தில் முழுவீச்சில் இறங்கினார்.

தோல்வியால் சோர்ந்திருந்த கூட்டணி கட்சிகளை ஊக்கப்படுத்தியது, பாஜக – ஆர்எஸ்எஸ் இடையிலான உறவில் இணக்கத்தை உண்டாக்கியது, கூட்டணியை வழிநடத்தி தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்டது எனக் கடுமையாக உழைத்தார்; உள்ளபடி ஃபட்னாவிஸ்தான் இந்தச் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் முகமாகச் செயல்பட்டார்.

எல்லாம் வாக்குகளாக மாறி, பாஜக கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை தேடித் தந்திருக்கிறது. இதன் மூலம், தன்னிடம் இருந்து தட்டிப் பறிக்கப்பட்ட முதல்வர் நாற்காலியை தன்னைத் தேடி வரச்செய்திருக்கிறார் தேவேந்திர ஃபட்னாவிஸ்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com