'பட்டியலில் முஸ்லிம்கள் எங்கே?' - சிஏஏ-வை அமல்படுத்தும் அரசும், அரசியல் சலசலப்புகளும்!

'பட்டியலில் முஸ்லிம்கள் எங்கே?' - சிஏஏ-வை அமல்படுத்தும் அரசும், அரசியல் சலசலப்புகளும்!
'பட்டியலில் முஸ்லிம்கள் எங்கே?' - சிஏஏ-வை அமல்படுத்தும் அரசும், அரசியல் சலசலப்புகளும்!

மதசார்பின்மை குறித்து கடும் சர்ச்சையை ஏற்படுத்திய சி.ஏ.ஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தும் பணியை மத்திய அரசு தொடங்கி உள்ளது.

குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் அகதிகளாக குடியேறியுள்ள அண்டை நாடுகளை சேர்ந்த சிறுபான்மையினர், இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்து, மீண்டும் எதிர்கட்சிகளுடன் பலப்பரீட்சைக்கு வித்திட்டுள்ளது.

அகதிகளுக்கு இந்திய குடியுரிமை அளிக்கும் பணியை தொடங்க முனைந்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 'பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து அகதிகளாக இந்தியாவுக்கு வந்து இந்த மாநிலங்களில் குடியேறி உள்ளவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்' என இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'இந்த நாடுகளில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பார்சி இனத்தை சேர்ந்தவர்கள், சீக்கியர்கள் மற்றும் புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு விண்ணப்பிக்கலாம்' என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் இஸ்லாமியர் இல்லாததை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் தொடர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

2019-ஆம் வருடம் டிசம்பர் மாதத்திலேயே இந்திய குடியுரிமை சட்டத்தில் முக்கிய திருத்தங்கள் நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற்றன. இந்த திருத்தங்களின்படி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய அண்டை நாடுகளை சேர்ந்த சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை அளிக்கலாம் என மத்திய அரசு முடிவு செய்தது. இந்த நாடுகளிலேயே இஸ்லாமியர் பெரும்பான்மையாக இருப்பதால் அவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்திய குடியுரிமை பெற முடியாது என சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சிகள் இந்த சட்டத்திருத்தத்தை கடுமையாக எதிர்த்தன. ஆகவே, சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்ட பிறகும் சர்ச்சை தொடர்ந்து கொண்டிருந்ததால், உடனடியாக மத்திய அரசு புதிய விதிகளை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

தற்போது குடியுரிமை சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தத்தின் அடிப்படையில், ஏற்கெனவே இந்தியாவில் அகதிகளாக வசித்துவரும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் நாட்டைச் சேர்ந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை அளிக்க முதல்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,

இந்தத் திருத்தச் சட்டத்தின்படி, இந்தியாவுக்கு 2014-ஆம் வருடத்துக்கு முன்பு அகதிகளாக வந்து இங்கே வசித்து வரும் இந்த மூன்று நாடுகளை சேர்ந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கலாம். அப்படி அகதிகளாக வசித்து வருபவர்கள் அந்தந்த மாவட்ட ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பம் அளிக்கலாம் என தற்போது உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அந்த விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் அந்தந்த மாநிலங்களின் உள்துறை செயலாளர்கள் பரிசீலனை செய்யலாம் என மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி பரிசீலனை நடந்த பிறகு தகுதியானவர்கள் என அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்படும் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை சான்றிதழ் அளிக்கப்படும். இதன் அடிப்படையிலேயே அவர்கள்
இந்திய குடிமக்களுக்கு அரசியல் சாசனப்படி வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளையும் பெறலாம்.

தேர்தல்களில் வாக்களிப்பது மற்றும் அரசு சலுகைகளை பெறுவது மற்றும் இந்தியாவில் அசையாத சொத்துக்களை உரிமையாக்கிக் கொள்வது போன்ற பல்வேறு வழிகளில் இந்திய குடிமக்களுக்கு கிடைக்கும் உரிமைகள் இப்போது அகதியாக உள்ளவர்களுக்கு கிடைக்கும்.

இந்த நடவடிக்கைக்கு அரசியல் ரீதியாக கடும் எதிர்ப்பு உருவாக வாய்ப்பு உள்ளது. ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத் திருத்தங்களுக்கு ஒருங்கிணைந்த எதிர்கட்சிகளால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பின்னர் தேசிய குடியுரிமை பட்டியல் முயற்சிக்கும் கடும் எதிர்ப்பு அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காணப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி, குடியுரிமை பட்டியல் தொடர்பான நடவடிக்கைகள் அசாம் மாநிலத்தில் எடுக்கப்பட்டு, பின்னர் தற்போது அமல்படுத்த முடியாத சூழ்நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கு காத்திருக்கும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் உள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை இலங்கைத் தமிழ் அகதிகளுக்கும் குடியுரிமை அளிக்க வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மத ரீதியாக குடியுரிமை அளித்து, இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதற்கும் எதிர்ப்பு இருந்து வருகிறது.

இந்நிலையில், உள்துறை எடுத்துள்ள நடவடிக்கை காரணமாக மீண்டும் ஒருமுறை எதிர்க்கட்சிகள் குடியுரிமை சட்டத்தில் செய்யப்படும் திருத்தங்களுக்கு எதிராக போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினர் பல்வேறு மதரீதியான இன்னல்களுக்கு உள்ளாவதால், அவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படுவதாக, மத்தியில் ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி தனது நிலைப்பாட்டை விளக்கியுள்ளது கவனிக்கத்தக்கது.

தற்போது கொரோனா பேரிடரில் இந்தியா போராடி வரும் சூழலில், சர்ச்சைக்குரிய சிஏஏ சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்துவது அரசியல் சலசலப்புகளை ஏற்பத்தும் என்றும் அஞ்சப்படுகிறது.

- கணபதி சுப்ரமணியம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com