RCB வெற்றிக் கொண்டாட்டம்.. எச்சரிக்கை விடுத்த காவல் துறை... புறக்கணித்த கர்நாடக அரசு!
பெங்களூருவில் RCB அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்துவதற்கு எதிராக காவல் துறை அதிகாரி ஒருவர் அரசு உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணி வென்றதை அடுத்து கடந்த ஜூன் 4ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க வேண்டாம் என்று காவல் துறையினர் எச்சரித்ததாகவும், அரசு அந்த எச்சரிக்கையை பொருட்படுத்தவில்லை என்றும் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் கர்நாடக சட்டமன்ற கட்டிடத்தின் பாதுகாப்பு பொறுப்பாளர் எம்.என்.கரிபசவன கவுடா, இதுதொடர்பாக அரசு பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் துறையின் செயலர் ஜி.சத்யவதிக்கு கடிதம் எழுதியதாகவும், அந்தக் கடிதத்தின் பிரதி தங்களிடம் இருப்பதாகவும் டைம்ஸ் ஆஃப் இண்டியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. நிகழ்ச்சி திட்டமிடப்பட்ட இடத்தில் போதுமான எண்ணிக்கையில் காவலர்களும் சிசிடிவி கேமராக்களும் இல்லாதது உள்ளிட்ட சிக்கல்களை சுட்டிக்காட்டி நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க வேண்டாம் என்று கவுடா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.