டெல்லி போராட்டம் | குற்றப்பிண்ணனியில் 989 பேர்.. டெல்லி போலீஸ் தகவல்!!
நீட் வினாத்தாள் முறைகேட்டுக்கு பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி, கரப்பான் ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தைத் தொடங்கினர். ஜூன் 20-ஆம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டம் ஒரு மாதத்தைக் கடந்தும், மத்திய அரசு கோரிக்கையை ஏற்கவில்லை. இதனையடுத்து, ஜூலை 20-ஆம் தேதி போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றனர். எனினும், நாடாளுமன்ற சாலையில் நுழையும்போதே காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை கலைக்க முற்பட்டனர்.
இதையடுத்து ஏற்பட்ட மோதலில், 100-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களும் காவல்துறையினரும் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. எனினும், போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், டெல்லி காவல்துறை ஏஐ கண்காணிப்பு வாகனங்கள் (Facial Recognition System) மூலம் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களை கண்காணித்து வந்தது. எனினும், போராட்டத்தில் பங்கேற்பவர்களின் முகங்களை AI மூலம் ஸ்கேன் செய்து தரவுகளை சேகரிப்பது, தனியுரிமை (Right to Privacy) மற்றும் அமைதியான போராட்ட உரிமையை மீறுகிறது என்றும் இது ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன.
இதற்கிடையில், தர்மேந்திர பிரதான் பதவி விலகியதைத் தொடர்ந்து 36 நாட்கள் நீடித்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. இந்தச் சூழலில், டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றவர்களை ஏஐ (AI) அடிப்படையிலான முகஅடையாள தொழில்நுட்பம் மூலம் ஆய்வு செய்ததில், 989 பேருக்கு முன் குற்றப்பதிவுகள் இருப்பதாக டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ளது. அவர்களில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களும் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
அவர்களில் 101 பேர் கொலை வழக்குகளிலும், 62 பேர் கொலை முயற்சி வழக்குகளிலும், 284 பேர் கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளிலும், 229 பேர் ஆயுதச் சட்டத்தின் கீழும், 135 பேர் வழிப்பறி வழக்குகளிலும், 67 பேர் போதைப்பொருள் சட்டத்தின் கீழும் 61 பேர் பாலியல் வன்கொடுமை வழக்குகளிலும், 25 பேர் பாலியல் துன்புறுத்தல் வழக்குகளிலும், 19 பேர் ஆட்கடத்தல் வழக்குகளிலும் மற்றும் 6 பேர் போக்சோ வழக்குகளில் தொடர்புள்ளவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

