நீட் தேர்வு போராட்டம்.. கைதானவர்கள் விடுதலை.. பிகார் அரசு உறுதி!!
நீட் தேர்வு முறைகேட்டிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கிட்டத்தட்ட ஒரு மாதமாக நடந்து வந்த இந்தப் போராட்டம் ஜூலை 20-ம் தேதி மாணவர்கள், காவல்துறையினர் இடையேயான மோதலாக மாறியது. இளைஞர்கள் மீது டெல்லி காவல்துறை நடத்திய தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் வீசுதல் போன்ற தாக்குதலால், 6 வயது சிறுவன் உட்பட 100-க்கு மேற்பட்ட இளைஞர்கள் காயமடைந்தனர். இதையடுத்து, டெல்லியில் போராடி வருபவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் போராட்டங்கள் தொடங்கின.
இந்தச்சூழலில் தான், இளைஞர்களின் தொடர்ச்சியான போராட்டங்களால் ஜூலை 26-ம் தேதி மத்திய கல்வித் துறை அமைச்சர் பதவியை தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது எந்த வழக்குப்பதிவும் செய்யக்கூடாது. கைது செய்யப்பட்டவர்களும் விடுவிக்கப்பட வேண்டும். முறைகேட்டால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு 1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்ற கோரிக்கைகளுக்கு மத்திய அரசு உறுதியளித்த நிலையில், போராட்டங்கள் முடித்துக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில் தான், பிகார் மாநிலத்தில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு போராட்டங்களில் கைது செய்யப்பட்டவர்களை விடுப்பதாக அம்மாநில உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிகார் சிறப்புச் செயலாளர் க்ஷத்ரானில் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” 26.07.2026 மாலை 6 மணி வரை மாநிலம் முழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்ற நபர்கள் மீது அரசு எந்தவித பழிவாங்கும் அல்லது தண்டனைக்குரிய சட்ட நடவடிக்கைகளையும் எடுக்காது. இந்தப் போராட்டங்களில் ஈடுபட்டதற்காக 26.07.2026 மாலை 6 மணிக்கு முன் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகள், குற்றவியல் புகார்கள் மற்றும் நோட்டீஸ்களை வாபஸ் பெறுவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் உடனடியாகத் தொடங்கப்படும்.
இந்த வழக்குகள் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட அல்லது காவலில் வைக்கப்பட்ட அனைவரும் உடனடியாக விடுவிக்கப்படுவார்கள். 26.07.2026 மாலை 6 மணிக்கு முன் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது எதிர்காலத்திலும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, மத்திய அரசு உறுதியளித்திருந்த போதிலும், வழக்கை ரத்து செய்வது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தச்சூழலில் தான், போராட்டத்தை ஒருங்கிணைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி, வழக்குகள் வாபஸ் பெறாவிட்டால் போராட்டம் மீண்டும் வெடிக்கும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது பிகார் அரசு இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

